பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய   வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

கைது செய்யப்பட்ட சுடலை

பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வீசிய நபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 17ஆம் தேதி பேருந்து நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாளையங்கோட்டை காவல்துறை நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் மணக்கரையை சேர்ந்த சுடலை(26) என்பவர் பேருந்து நிலையத்தில் உள்ள சீனிப்பாண்டி என்பவரது டீக்கடையில் பணிபுரிந்து வந்ததும், சம்பவத்தன்று சுடலை மதுபோதையில் கோயில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் வெடி மருந்துகளை கொண்டு வெடி குண்டு தயாரித்து பேருந்து நிலைய சுவற்றில் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சுடலையை கைது செய்தனர்.

நெல்லை மாநகரின் முக்கிய பகுதியான பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம் மாநகர மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுடலையை இன்று காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் குமார் உத்தரவின்பேரில், சுடலையை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்ததாக மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான ஆணையை பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் திருப்பதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஒப்படைத்தார்.

Tags

Next Story