கேரளாவுக்கு கடத்த முயன்ற 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது

கேரளாவுக்கு கடத்த முயன்ற 50 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 5 பேர் கைது
X

 ரெட்டையார்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்.

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு 4 லாரிகளில் கடத்த முயன்ற 50 டன் அரிசி பறிமுதல். 5 பேர் கைது.

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு நான்கு லாரிகளில் கடத்த முயன்ற ஐம்பது டன் ரேஷன் அரிசி பறிமுதல். லாரி ஓட்டுனர்கள் உள்பட ஐந்து பேர் கைது.

நெல்லை மாவட்டம் ரெட்டையார்பட்டி அருகே நான்கு லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் முன்னீர்பள்ளம் காவல் துறையினர் மற்றும் நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நான்கு லாரிகளையும் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது லாரியின் பின்பக்க முகப்பில் தேங்காய் நெட்டுகளை சாக்கு மூட்டையில் அடுக்கி வைத்துள்ளனர். இருப்பினும் சந்தேகத்தில் போலீசார் லாரியின் உள் பக்கம் உள்ள முட்டையை அவிழ்த்து சோதனை செய்தபோது அதில் ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. போலீசாருக்கு சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காக பின்பக்கம் மட்டும் தேங்காய் நெட்டுகளை அடைத்து வைத்து உள்புறம் மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்து நான்கு ஓட்டுநர்கள் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நெல்லை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இரண்டு லாரிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இரண்டு லாரிகளிலும் ரேஷன் அரிசியை சேகரித்து நெல்லை வழியாக கேரளா மாநிலத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். அப்போது அரிசி சாலையில் கசிந்ததை கவனித்து பொதுமக்கள் சந்தேகத்தின் பேரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி பாஸ்கருக்கு நேரடியாக புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரிலேயே 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 டன் ரேஷன் அரிசி இருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இந்த கடத்தல் சம்பவம் குறித்து போலீசார் லாரி ஓட்டுனர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் வாடிக்கையாக நடைபெறும் சூழலில் ஒரே நேரத்தில் 4 லாரிகளில் சுமார் 50 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!