பிரியாணிக்கு பிரியாணி இலவசமாம்! மெடிக்கல் சிட்டி ஆகிறதா திருநெல்வேலி ?
கோப்புப்படம்
பல லட்சம் பெறுமானமுள்ள கார்களில் வந்து முண்டியடித்து இரண்டு கைகளிலும் பார்சல் வாங்கி ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பெருமிதத்தோடு வரும் வீரர்கள் போல வாடிக்கையாளர்கள் பிரியாணி வாங்கிக் கொண்டு வந்தனர்.
தற்போதெல்லாம் இரவு நேரங்களில் அசைவ உணவகங்கள் முன்பாக ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எந்தவித உடற்பயிற்சியும் செய்யாமல் டேஸ்ட் பட்ஸ் கேட்கும் உணவுகளை ரவுண்ட் கட்டும் இளைஞர் பட்டாளம் மொத்த இருக்கைகளையும் குத்தகைக்கு எடுத்து விடுகின்றனர்.
20 வயதை தாண்டுவதற்குள் இடுப்பு சுற்றளவு 40 அங்குலத்தை தாண்டி விட்ட பையன்மாரை பார்க்கின்ற பொழுது எதிர்காலம் நிச்சயமாக அவர்கள் கையில் இல்லையே என்ற கவலையும் இல்லாமல் இல்லை. உண்பதில் ஒழுக்கம் இல்லாத மூன்று தலைமுறைகள் ஒரு சேர இருப்பதையும் பார்க்க முடிகிறது.
முன்பு பழைய சந்திப்பு பேருந்து நிலையத்தில் மாலை நேரங்களில் அடுத்தடுத்த இரண்டு கடைகளில் கூட்டம் அலைமோதும் ஒன்று சாந்தி ஸ்வீட்ஸ் மற்றொன்று. அதன் அருகில் இருந்த செயின் மேரீஸ் மெடிக்கல்ஸ்.
ஒரு அல்வா கடைக்கு ஒரு மெடிக்கல், அது ஒரு நியாயம். அதில் ஒரு தர்மம் இருக்கிறது. அப்படின்னா நான்கு பிரியாணி கடைகளுக்கு? மருத்துவம் வேணும் தானே.
தற்போது தான் அந்த இனிப்பான செய்தி வந்துள்ளது. நெல்லை மாநகரில் நான்கு புதிய மருத்துவமனைகள் எழும்பி வருகிறதாம். அதில் ஒன்று ஏழு மாடி, ஒன்று ஐந்து மாடி, நான்கும் சேர்த்து மொத்தத்தில் ஒரு லட்சம் சதுர அடியை தாண்டுகிறது.
ஏற்கனவே இந்த மாநகரத்திலே பத்துக்கும் மேற்பட்ட கருத்தரிப்புக்கென பிரத்தியேக மருத்துவமனைகள் சக்கை போடு போட்டு வருகின்றன. அதன் எண்ணிக்கையும் இரண்டு மடங்காகும் போல, பெருநகரங்களில் மட்டுமே இயங்கி வரும் ஒரு கார்ப்பரேட் மருத்துவமனை இங்கே இடம் பார்த்து வருவதாகவும் ஒரு தகவல். இது நெல்லைக்கான தகவல் மட்டுமல்ல, கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. எல்லா இடங்களிலும் நான்-வெஜ் வியாபாரம் களை கட்டி வருகிறது. நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.
ஹோட்டல்களைத் தவிர்த்து வீடுகளில் சமையல் செய்து ஆரோக்கியமாய் வாழ முயற்சி செய்யுங்கள் மக்களே. சரியான விகிதத்தில் உணவு உடற்பயிற்சி உழைப்பு உறக்கம் அமைவது நல்வாழ்வுக்கான திறவுகோல், மாறுவோமா
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu