நெல்லையில் காந்தி தங்கிய கூத்த நயினார் இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை
நெல்லையில் 1934 ம் ஆண்டு மகாத்மா காந்தி தங்கிய தேசபக்தர் சாவடி கூத்த நயினார் இல்லத்தில் காந்தியின் 153 பிறந்த நாள் விழா நடைபெற்றது.
நெல்லையில் 1934 ம் ஆண்டு மகாத்மா காந்தி தங்கிய தேசபக்தர் சாவடி கூத்த நயினார் இல்லத்தில் மகாத்மா காந்தியின் 153 பிறந்த நாள் விழா.
அகிம்சை, எளிமை, தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு போன்ற கொள்கைகளால் எதிர்கால இந்தியாவை உருவாக்கி, ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், சுதேசிய பொருள் பயன்பாடு, வெள்ளையனே வெளியேறு, போன்ற வழியில் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று தனது பேச்சு, எழுத்து, நடவடிக்கைகளால் அந்நியரை பணிய வைத்து, அரசியலில் நேர்மை, மனிதநேயம், பொது வாழ்வில் தூய்மை, ஒழுக்கம் போன்ற உயரிய பண்புகளால் உலகமே போற்றும் உன்னத தலைவராக விளங்கிய மகாத்மா காந்தி மீது அளப்பரிய அன்பும், நேசமும் கொண்டவர் தேசபக்தர் சாவடி கூத்த நயினார் பிள்ளை.
மகாத்மா காந்தி நெல்லை மாநகரில் தேசபக்தர் சாவடி கூத்த நயினார் பிள்ளை இல்லத்தில் அரிஜன புனித யாத்திரை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 1934 ஆம் வருடம் ஜனவரி 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் வந்து தங்கியிருந்தார். அவர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்து கூட ஒரு நாள் தங்கினார். நெல்லையில் அவர் தங்கியிருந்து மகிழ்ந்த அந்த இல்லத்தில் அந்த அறை புனிதமாக கருதி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த புனித அறையில் மகாத்மா காந்தியின் 153 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்திற்கு பாரதியார் உலக பொது சேவை நிதியத் தலைவர் அ.மரியசூசை, டான்சிட்டி அரிமா சங்க பட்டயத் தலைவர் ஜானகிராம் அந்தோணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வருகை தந்தவர்களை தேசபக்தர் சாவடி கூத்த நயினார் பிள்ளை பேரன் கூத்த நயினார் என்ற செந்தில் வரவேற்றார்.
நிகழ்வில் டான்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.சி. ராஜன், பாரதியார் உலக பொது மன்ற பொதுச் செயலாளர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், தமிழ் நலக்கழக மாவட்டத் தலைவர் கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, அரிமா கதிரேசன், சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர்.சு.முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் போராட்ட நெறி, கொள்கைகள், பெருமைகளை பேசினார்கள். நிறைவாக தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. தேசபக்தர் சாவடி கூத்த நயினார் பிள்ளை பேத்தி.தமிழாசிரியை ஆவுடைச்செல்வி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu