ஆதரவின்றி சாலையோரம் தவித்த மூதாட்டிக்கு உதவிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்: குவியும் பாராட்டு

சுத்தமல்லியில் ஆதரவின்றி சாலையோரம் தவித்த மூதாட்டியை பெண் சப்-இன்ஸ்பெக்டர் தன்னுடன் அழைத்து சென்று காப்பகத்தில் சேர்த்தார்.

ஆதரவின்றி சாலையோரம் தவித்த மூதாட்டியை தன்னுடன் அழைத்துச் சென்று காப்பகத்தில் சேர்த்த பெண் சப்-இன்ஸ்பெக்டர். மனிதநேயத்தை வெளிப்படுத்திய பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு குவியும் பாராட்டுக்கள்.

நெல்லையை அடுத்த சுத்தமல்லி விலக்கு பஜார் சாலையோரத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கடந்த ஒரு மாதமாக ஆதரவின்றி சுற்றித்திரிந்தார். இரவு நேரங்களில் ஏதாவது ஒரு கடை முன்பு படுத்து தூங்கிவிடுவார். இது குறித்து அறிந்த முகநூல் நண்பர்கள் குழு மற்றும் சோயா டிரஸ்ட் ஊழியர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி குறித்து விசாரித்த போது அவர் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சிறிது மனநிலை பாதிக்கப்பட்டுள்ள அந்த மூதாட்டியை பாளையங்கோட்டை மகாராஜநகரிலுள்ள மாநகராட்சி சோயா டிரஸ்ட் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.‌ ஆனால் பல மணி நேர பேச்சு வார்த்தை நடத்தியும் அந்த மூதாட்டி நான் வரமாட்டேன். இங்கேயே இருந்து கொள்கிறேன் என அடம்பிடித்தார்.

அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் சென்ற சுத்தமல்லி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரேசா அருகில் வந்து காப்பகத்திற்கு செல்ல மறுத்த மூதாட்டியிடம் நான் உங்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டு மூதாட்டியின் மனதை மாற்றி ஒரு ஆட்டோவை வரவழைத்து மூதாட்டியை தன்னுடன் அழைத்துக்கொண்டு மகாராஜநகரில் உள்ள காப்பகத்தில் பத்திரமாக சேர்த்தார்.

ஆதரவின்றி சாலையோரம் தவித்த மூதாட்டியை பத்திரமாக காப்பகத்தில் சேர்த்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் மனிதநேய செயலை கண்டு காவலர் பொது மக்களின் நண்பன் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்தது என பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாராட்டினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி