ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருனை அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் ஆய்வு
ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருனை அருங்காட்சியகத்திற்கான இடத்தினை சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருனை அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
திருநெல்வேலி மாநகராட்சி ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் பொருனை அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு, திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் , சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல்வகாப் (பாளையங்கோட்டை), ரூபி.ஆர்.மனோகரன் (நாங்குநேரி), முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன் , தொல்லியியல்துறை ஆணையர் சிவானாந்தம் ஆகியோர் முன்னிலையில் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற கூட்ட தொடரில் திருநெல்வேலி மாநகரத்தில் பொருணை நாகரித்தை மையப்படுத்தி தாமிரபரணி நதிக்கரையில், தமிழக தொல்லியியல் துறை சார்பில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு பணியில் கிடைத்த பொருட்களை காட்சி படுத்த உலக தரத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி 13 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமையபெறும் இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பொருணை நதி கரையில் அமைந்துள்ள கொற்கையில் 812 பொருட்களும், ஆதிச்சநல்லூரில் 1020 பொருட்களும், சிவகளையில் 185 பொருட்களும், பூர்வகுடி மக்கள் பயன்படுத்திய வலையல், பாசி, சுடுமண் பொம்மைகள், இரும்பினால் செய்யப்பட்ட பொம்மைகள், முதுமக்கள் தாலி, நாணயம், பானை, ஏடுகள், போன்ற பொருட்கள் என்று ஏறத்தாழ 2617 பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. அகழ்வாய்வுகளின் போது கண்டறியப்பட்ட பொருட்களும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு தொடர்புடைய பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சி படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக அமையபெறவுள்ள இந்த அருங்காட்சியகத்தை சுற்றி பல்வேறு சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இடங்களை அமைக்கவும், கலை மற்றும் கலாச்சாரங்களை பிரதிபளிக்கும் வகையிலும், சுற்றுலா மையம், திறந்தவெளி திரையரங்க வசதிகளுடன் பழங்கால கலாச்சாரங்களை பிரதிபளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாநகரத்தின் சுற்றுலா தளங்களில் மிக முக்கிய அம்சமாக திகழும் வகையில் பொருணை அருங்காட்சியம் அமையபெறவுள்ளது. அருங்காட்சியகத்தின் அருகில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தின் அழகினை முழுவதும் கண்டு ரசிக்கும் வகையில் டெலஸ்கோப்புடன் கூடிய உயர் கோபுர பார்வை மாடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தினை அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் உடனடியாக துவங்கும் பொருட்டு விரிவான திட்ட மதிப்பீடு செய்து அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். தாமிரபரணி நதிகரையில் பல்வேறு புதிய இடங்களில் அகழ்வாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. துலுக்கர்பட்டி பகுதியில் அகழ்வாய்வு பணிகள் துவங்குவதற்கு பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழ்வாய்வு செய்து கண்டறியப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும். தமிழக தொல்லியியல் துறை சார்பில் அகழ்வாய்வு பணிகளில் கிடைத்த பொருட்களை நெல்லை அருங்காட்சிகத்தில் காட்சி படுத்தப்படவுள்ளது. என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன், திருநெல்வேலி கோட்டாட்சியர் சந்திரசேகர், உதவி இயக்குநர் (நில அளவை) வாசுதேவன், பாளையங்கோட்டை வட்டாட்சியர் ஆவுடையப்பன், மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu