கூட்டப்பனை கிராமத்தில் கடல் அரிப்பு: கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆய்வு
கூட்டப்பனை கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் த.மு.அப்பாவு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆகியோர் ஆய்வு செய்தனர்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம் கூட்டப்பனை கிராமத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் த.மு.அப்பாவு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா, மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.
பின்னர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்ததாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கடற்கரை கிராமமான கூட்டப்பனை கிராமத்தில் கடல் அலையின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் மீனவ மக்கள் 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். 60 மீன்பிடி படகு மூலம் தொழில் செய்து வருகிறார்கள். கூட்டப்பனை கிராமத்தில் 100 மீட்டர் அளவிற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க துாண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் ஐ.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் இணைந்து இக்கடற்கறை பகுதியில் துாண்டில் வளைவு மற்றும் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தயாரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. துாண்டில் வளைவு அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்காலிகமாக கடல் அரிப்பை தடுக்க ஆராய்ந்து உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமமான கூந்தங்குழி, இடிந்தகரை, பெத்தேல் நகர், ஜார்ஜ் நகர், உவரி போன்ற மீனவ கிராமங்களில் கடல் அரிப்பு சம்மந்தமாக பணிகள் மேற்கொண்டால் மற்றொரு கிராமத்தை பாதிக்கிறது. எனவே முழுமையாக ஆய்வு செய்து அப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீனவ கிராமங்களில் துாண்டில் வளைவு எவ்வாறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதோ. அதேப போல இந்தகிராமத்தில் துாண்டில் வளைவு அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் இப்பணிகளை துவங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏன தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
தொடர்ந்து, ஆயன்குளம் ஊரில் அமைந்துள்ள மழை நீரை உள்வாங்கும் அதிசிய கிணற்றினை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் ஏ.த.மோகன்குமார், திசையன்விளை வட்டாட்சியர் செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu