கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்: பேரவைத்தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார்
கூடன்குளம் அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திறந்து வைத்தார்.
கூடன்குளம் அரசு அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கத்திற்கு முன்னதாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூடன்குளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது, விரைவில் அங்கு ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் பிரசவ வார்டு தனியாக அமைக்கப்படும் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து ,கூடன்குளம் அணு உலை நிலையம் சார்ந்த லார்ஸ் அண்ட் டூப்ரோ தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அரசு மருத்துவமனை வளாகத்திற்கு ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் காற்றிலிருந்து நேரடியாக ஒரு மணி நேரத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள் கலன்கள் வரவழைக்கப்பட்டன. மேலும், அவைகளை இயக்குவதற்கு தேவையான கான்க்ரீட் தளம் மற்றும் மின் மாற்றி போன்ற உபகரணங்கள் ஏற்கெனவே பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் இருந்தன.
இந்நிலையில், இன்று ஆக்சிஜன் தயாரிக்கும் கொள்கலன்களை, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, நோயாளிகள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
பின்னர், நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியது: இந்தியாவிலேயே அதிக அளவு தடுப்பூசி தமிழகத்தில் தான் போடப்பட்டுள்ளது. மேலும், கூடன்குளம் அரசு மருத்துவமனையில் 100 க்கும் மேற்பட்ட அதிக படுக்கைகள் கொண்ட வார்டு மற்றும் ஏற்கெனவே இப்பகுதி மக்கள் கோரிக்கையின்படி, பிரசவ வார்டும் தற்போது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பரவல் 3 வது அலை தமிழகத்தில் பரவினாலும், அதனை தடுக்கும் விதமாக, வேண்டிய அளவு படுக்கை வசதிகள், போதிய ஆக்சிஜன் வசதிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் கையிருப்பில் இருக்கின்றன என்றார் அவர். இதில் , தாசில்தார் ஏசுராஜன், கூடன்குளம் அரசு டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu