மக்களை தேடி மருத்துவ திட்டம்: சபாநாயகர் அப்பாவு துவக்கி வைப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை முதன்முதலாக கிராமப்பகுதியில் சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உங்கள் தொகுதியில் ஸடாலின் திடடத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா 51 பயனாளிகளுக்கு வழங்கி, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை முதன்முதலாக கிராமப்பகுதியில் சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது நெல்லை மாவட்டம், வில்வனம்புதூரில் நடைபெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற திட்டத்தை அறிவித்தார். இதன்படி மக்களிடம் மனுக்களை பெறப்பட்டு பின்பு ஆட்சிப் பொறுப்பேற்றதும் அம்மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பத்திருந்த 112 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கென தெற்கு வள்ளியூர் அருகே உள்ள அரசு இடம் தேர்வு செய்யப்பட்டது. முதற்கட்டமாக அந்த பயனாளிகளில் 51 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் வழங்கினர்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், அரசு கொடுக்கும் இடத்தினை அளவீடு செய்து தனியார் போன்று பிளாட் அமைத்து ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். மேலும் அதில் 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வீடுகளை தேடி மருத்துவ உதவிகளை வழங்கும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதிகுட்பட்ட திசையன்விளை வட்டாரப்பகுதியில் உள்ள சமூகரெங்கபுரம் கிராமத்தில் உங்களை தேடி மருத்துவம் திட்டத்தினை தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்பு அப்பகுதியிலுள்ள சில வீடுகளுக்கு நேரில் சென்று மருந்து மாத்திரைகளை வழங்கினர். பின்னர் பயனாளிகளின் வீட்டிற்கு சென்று பயனாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்டனர். இத்திட்டத்தின் கீழ் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நோயாளிகளை கண்டறிந்து அவர்களது வீட்டிற்கே சென்று மாத்திரைகள் வழங்கப்படும். இந்த பணியினை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்வார்கள்.
மேலும் இதுபோன்று அனைத்து வகை நோயாளிகளையும் கண்டறிந்து இத்திட்டத்தை முறையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முதற்கட்டமாக திசையன்விளை வட்டார பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 2700 நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கான மருந்துகள் 2 மாதத்திற்கு வழங்கப்படும். இத்திட்டம் தமிழகம் முழுவதும் நகராட்சி பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முதன்முதலாக நெல்லை மாவட்டம் இராதாபுரம் தொகுதிகுட்பட்ட சமூகரெங்கபுரம் கிராமப்பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu