கூடன்குளம் அணுஉலை கழிவுகளை வளாகத்திற்குள் சேமிக்க கூடாது - சபாநாயகர் அப்பாவு

கூடன்குளம் அணுஉலை கழிவுகளை வளாகத்திற்குள் சேமிக்க கூடாது - சபாநாயகர் அப்பாவு
X

ராதாபுரம் லெப்பை குடியிருப்பில் சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்தார்.

அணுஉலை கழிவுகளை பாலைவனங்களிலோ, பயன்பாடற்ற இடங்களிலோ சேமித்து வைக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்-சபாநாயகர் அப்பாவு.

கூடன்குளம் அணுஉலைக் கழிவுகளை அதன் வளாகத்திற்குள் சேமிக்க கூடாது என்றும் மக்கள் வாழ தகுதியற்ற பாலைவனப் பகுதிகளிலோ அல்லது பயன்பாடற்ற கோலார் தங்க சுரங்கங்களிலோ சேமித்து வைக்க மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என ராதாபுரம் லெப்பை குடியிருப்பில் சபாநாயகர் அப்பாவு பேட்டியில் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடங்குளத்தில் இந்திய அணுமின் கழகத்தின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் 3, 4, 5, 6 ஆகிய அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் இந்த பகுதியில் அணுக்கழிவுகளை சேமிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். காரணம் இந்த பகுதியில் இருந்து 800 கிலோமீட்டர் தூரம் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் தமிழகம், கேரளா மற்றும் தென் மாவட்ட பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்த திட்டம் குறித்து ஒப்பந்தம் போடுகின்ற பொழுது அப்போதைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அணுக்கழிவுகளை ரஷ்யாவிற்கு எடுத்துச் சென்றுவிட வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளார். அணுக்கழிவுகளை இங்கு சேமிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் பணிகள் நடந்து வந்தது. மேலும் இங்கு சேமிக்க கூடாது என உச்சநீதிமன்றம் வரை சென்று மக்கள் போராடி வருகின்றனர். மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்பதை மத்திய அரசுக்கு கோரிக்கையாக தெரிவித்துள்ளேன். மத்திய அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் .

இலங்கை துறைமுகத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் மிக அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அணுக்கழிவு மையம் செயல்படுவது உகந்ததல்ல. இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மக்கள் வசிக்காத பகுதியான பாலைவனம் போன்ற பகுதிகளில் தான் பொக்ரான் வெடிகுண்டு சோதனையை நடத்தினார். இந்த மாதிரியான மக்கள் வாழ தகுதியற்ற இடங்களில் அணுக்கழிவு மையம் அமைக்கப்பட வேண்டும். இதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இது குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வரை மனு கொடுத்துள்ளேன். மத்திய அரசிடமும் இதனை கோரிக்கையாக வைத்துள்ளேன். எனவே மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்திற்கு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே இந்த பகுதியில் பலருக்கு புற்றுநோய் உள்ளது. கூடங்குளம் அணுஉலையின் காரணமாகவே வந்ததாக கூறப்படுகிறது . ஆகவே அனுகழிவு சேமிப்பு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!