நெல்லையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி, விவசாயிகள் வேதனை
நெல்லையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாக வழங்கி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் திசையன்விளை சுற்றுவட்டார முருங்கைக்காய் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் முருங்கைக்காய் சாகுபடி நடந்து வருகிறது.
முருங்கைக்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்பொழுது திருமண விருந்து, கோவில் கொடை விழா, அன்னதானம், புதுமனை புகுவிழா, அசன விருந்து போன்ற விழாக்கள் எதுவும் பெருமளவில் நடைபெறாததாலும்,
மிக எளிய முறையில் நடைபெறுவதாலும் முருங்கைக்காய் விற்பனை அதிக அளவில் நடைபெறவில்லை. இதனால் முருங்கைக்காய் விலை மார்க்கெட்டில் ஒரு கிலோ 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மனமுடைந்த முருங்கைக்காய் விவசாயிகள் முருங்கைக் காய்களை பறித்து கால் நடைகளுக்கு உணவாகவும், எஞ்சியவற்றை சாலையிலும் கொட்டுகின்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயிகளிடம் கிலோ 3 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் அவற்றை வெளியிடங்களுக்கு ஆறு ரூபாய்க்கு தான் ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்
நெல்லுக்கு குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது போல் முருங்கைக் காய்க்கும் அரசு குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பதோடு, முருங்கைக் காய்களை பாதுகாத்து வைப்பதற்கு குளிர்சாதன கிடங்கு வசதியை ஏற்படுத்தித்தந்து முருங்கை விவசாயிகளின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu