நெல்லை-துலுக்கர்பட்டி கிராமத்தில் அகழாய்வு பணிகள் துவக்கம்
துலுக்கர்பட்டி கிராமம் அகழாய்வு தளத்தில் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், துலுக்கர்பட்டி கிராமம் அகழாய்வு தளத்தில் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டி கிராமத்தில் அகழாய்வு தளத்தில் பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு, தொல்லியல்துறை இயக்குநர் முனைவர்.சிவானந்தம் முன்னியைலில் இன்று (16.03.2022) தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் நம் தமிழர் பண்பாட்டை உலக மக்கள் அறிய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொல்லியல்துறையின் மூலம் இந்த ஆண்டில் தமிழகத்தில் 7 இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து கடந்த 11.02.2022 அன்று சிவகங்கை மாவட்டம், கீழடி அதனை சுற்றியுள்ள இடங்கள் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய பகுதியில் அகழாய்வு பணிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று இராதாபுரம் வட்டம் துலுக்கர்பட்டி கிராமத்தில் அகழாய்வு தளத்தில் பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த துலுக்கர்பட்டி கிராமம் நம்பி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் கீழக்கே கண்ணநல்லூர் செல்லும் சாலையில் இத்தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இந்த தொல்லியல் மேடானது விளாங்காடு என்றழைக்கப்படுகிறது. இரும்பு மற்றும் வரலாற்றுத் தொடக்க காலத்தை சார்ந்த இவ்வாழ்வியல் மேடானது. சுமார் 2.5மீ உயரம்,12 ஹெக்டேர் 36 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. செவ்வண்ணம், கருப்புசிவப்பு வண்ணம், கருப்பு வண்ணம், வெண்புள்ளி இட்ட கருப்பு சிவப்பு வண்ண மட்கல ஓடுகளும், குறியீடுகள் கொண்ட மட்கல ஓடுகளும் ஈமத்தாழிகளும் இங்கு கிடைக்கின்றன.
இந்த அகழாய்வின் குறிக்கோளானது இப்பண்பாட்டு மேட்டில் கிடைக்கப்பெறுகின்றன. அரிய தொல்பொருட்களை கருத்தில் கொண்டு தன்னுள் மறைந்துள்ள பண்பாட்டுக்கூறுகளையும், செறிவுமிக்க இவ்வாழ்வியல் தளத்தினை உருவாக்கம் குடியேற்ற முறை மற்றும் தொல்பொருட்களின் தன்மை ஆகியவற்றை கண்டறியவும், நம்பி ஆற்றின் கரையில் இரும்புக்காலப் பண்பாட்டின் வேர்களைத் தேடுவதுமே இவ்வகழ்வாயின் முக்கிய நோக்கமாகும். இத்தொல்லியல் தளமானது சிவகளை ஆதிச்சநல்லூருக்கு சமகாலக்கட்டமாகும்.
தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை இந்த ஆண்டில் 7 இடங்களில் அகழாய்வும், 2 இடங்களில் களஆய்வும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை, தர்மபுரி மாவட்டம், பெரும்பாலை ஆகிய இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்கப்படுகிறது என்றார் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.
இதில், மாவட்ட ஊராட்சிமன்ற தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட கவுன்சிலர்கள் பாஸ்கர், சாந்தி, கனகராஜ், வள்ளியூர் ஊராட்சிமன்ற தலைவர் ராஜா ஞானதிரவியம், இராதாபுரம் வட்டாட்சியர் யேசுதாஸ், ஆணைக்குளம் பஞ்சாயத்து தலைவர் மைதீன், மகாராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu