திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உலக கை கழுவுதல் தினம் கடைப்பிடிப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக கை கழுவுதல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி 'கை கழுவுதல் தினம்' கடை பிடிக்கப்படுகிறது. அதன்படி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு. இரவிச்சந்திரன் ஆலோசனைபடி மருத்துவமனை உள் வளாகத்தில் மக்கள் கூடும் இடங்களில் கை கழுவும் 7 நிலைகள் குறித்து செய்முறை பயிற்சி வழங்கப்பட்டது. முன்னதாக உதவி முதல்வர் மரு. சாந்தாராம் வலியுறுத்தலின்படி செவிலியர், பயிற்சி மாணவிகள் மற்றும் பாரா மெடிக்கல் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு கை கழுவும் நிலைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த செய்முறை விளக்க நிகழ்ச்சியில் செவிலியர் பயிற்சி பள்ளி முதல்வர் சாந்தி இருதயராஜ் தலைமை வகித்தார். செவிலியர் பயிற்றுநர் செல்வன் விளக்க படங்களுடன் கை கழுவும் எளிய ஏழு நிலைகளை குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கூறியதாவது:- கை கழுவும் அவசியத்தை மக்கள் புரிந்து கொள்ளவே இந்த தினம் உருவாக்கப்பட்டது. தற்போதைய சுகாதார நெருக்கடி, தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. கை கழுவுதல், தொற்றுநோயைத் தடுக்க ஒரு சுலபமான வழி, குறிப்பாக இந்த கோவிட்-19 காலங்களில். நமது கைகளை எப்போது கழுவ வேண்டும். எப்படி கழுவ வேண்டும் என்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்வது அவசியம். கை கழுவுவதற்கு சோப்பு மற்றும் தண்ணீர் மட்டுமே போதுமானது. கைகளை கிருமி இல்லாமல் வைத்திருப்பது சாத்தியமற்றது என்றாலும், நமது கைகளை அடிக்கடி கழுவுவது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளின் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். கைகள் உடலின் ஒரு பகுதியாக இருப்பதால் அவை எப்போதும் நமது முகத்தைத் தொடும் என்பதால் அவை சுத்தமாக இருப்பதை நாம் எப்போதும் உறுதி செய்ய வேண்டும்.
நிகழ்ச்சியில் கை கழுவும் நிலைகள் குறித்த விழிப்புணர்வு கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. நிறைவாக கை கழுவும் அவசியத்தை உணர்த்தும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் செவிலியர், போதகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu