முதுபெரும் எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப் உடல்நலக் குறைவால் காலமானார்
முதுபெரும் எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப்.
நெல்லையின் முதுபெரும் எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப் உடல்நலக் குறைவால் காலமானார். எழுத்தாளர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
நெல்லையின் முதுபெரும் எழுத்தாளரான வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் காலமானார். இவர் தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அருகே ராஜாவின் கோயில் கிராமத்தில் பிறந்தவர் ஆவார். தற்போது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்திநகரில் வசித்து வந்தார். ஆசிரியரான ஜேக்கப் நூறுக்கும் மேற்பட்ட நூல்கள் சிறுகதைகளை எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய வாத்தியார் என்ற நூல் மிகப்பிரலமானதால் வாத்தியார் ஜேக்கப் என அழைக்கப்பட்டார்.
மரண வாயிலிலே பைபிள் சிறுகதை என இவர் எழுதிய பல நூல்கள் பிரபலமானவை ஆகும். ஆசிரியராக பணிபுரிந்த போது சமூக சிந்தனையோடு செயல்பட்டார. அதன் காரணமாக இவர் பணிபுரிந்த நயினார் புரம் பள்ளியில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் பலரை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். அனைத்து சமூக மாணவர்களும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் தான் வேலை பார்த்த பள்ளியில் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டார். மேலும் 1950 கால கட்டங்களில் நடைபெற்ற தென்மாவட்ட ரயில் கவிழ்ப்பு சம்பவமான நெல்லை சதி வழக்கில் கைது செய்யப்பட்ட 97 பேரில் வாத்தியார் ஜேக்கப்பும் ஒருவர் ஆவார்.
அச்சம்பவத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அடைக்கலம் கொடுத்த காரணத்துக்காக எழுத்தாளர் ஜேக்கப் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்ட போது கடும் சித்ரவதைகளை அனுபவித்ததாக தான் எழுதிய நாவலில் அவரே குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற வரலாற்றை உள்ளடக்கிய முதுபெரும் எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப் பாளையங்கோட்டை இல்லத்தில் வைத்து நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு சக எழுத்தாளர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu