தமிழ்நாட்டில் ரவுடிகள் கைது நடவடிக்கை தொடரும் - தென் மண்டல ஐஜி அன்பு
பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த தென் மண்டல ஐஜி அன்பு.
நெல்லையில் பிரபல ரவுடி என்கவுண்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு தற்பாதுகாப்புக்காகவே ரவுடியை எஸ்.ஐ. சுட்டார். தமிழ்நாட்டில் ரவுடிகள் கைது தொடரும் என தென் மண்டல ஐஜி அன்பு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் இன்று நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த என்கவுன்டர் சம்பவத்தில் ஈடுபட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா உள்ளிட்ட நான்கு காவலர்களை ரவுடி நீராவி முருகன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த காவலர்கள் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தென் மண்டல ஐஜி அன்பு சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- நடந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் இசக்கிராஜா அறிக்கை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நீதிபதியிடம் நாங்கள் அறிக்கையை சமர்ப்பிப்போம். பின்னர் நீதிபதி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ரவுடி நீராவி முருகன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. ஏற்கனவே இவர் மீது 60க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் உள்ளன. குறிப்பாக சென்னையில் பெண் ஒருவரை கத்திமுனையில் மிரட்டி நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது அனைவருக்கும் தெரியும். அது போல் பெண்களை அச்சுறுத்தி அவர்களிடம் நகைகளை பறிக்கும் சம்பவங்களில் தொடர்புடையவர் இது போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் அவரை பிடிக்க முயன்ற போது காவலர்கள் மீது தாக்கியுள்ளார்.
அந்த வகையில் இன்றும் காவலர்கள் அவரை கைது செய்ய முயன்றபோது தாக்கியதால் தற்பாதுகாப்புக்காக எஸ்ஐ அவரைச் சுட்டார். என்கவுண்டர் சம்பவங்களில் ஈடுபடும் போலீசாருக்கு காவல்துறை சார்பில் நேரடியாக பதக்கங்கள் வழங்க முடியாது. இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. எனவே நீதிமன்ற விசாரணைக்கு பிறகே அது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சந்தேகத்தின்பேரில் தான் ரவுடியை கைது செய்ய முயன்றோம். தற்காப்புககாகவே அவரை சுட நேரிட்டது. இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu