நெல்லையில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து முகாம்: ஆட்சியர் விஷ்ணு துவக்கம்
ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஏ.ஆர்.லைன் ரோடு அங்கன்வாடி மையத்தில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு நேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டத்தின் கீழ் குழந்தைகள் வளர்ச்சி நிலையை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமினை 21.05.2022 அன்று உதகை மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1,261 குழந்தை மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 400 சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் 4 வாரங்கள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் 20,947 குழந்தைகள் பரிசோதனை செய்யப்படவுள்ளனர்.
ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை மற்றும் சுகாதார துறை ஒன்றிணைந்து 6 வயதுக்குட்பட்ட கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளபட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் மற்றும் ஊட்டசத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரை பிரித்தரிந்து குழந்தைகளின் ஊட்டசத்து குறைபாடு நீக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரபணிகள் மரு.கிருஷ்ணலீலா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசூர்யா, உதவி திட்ட மேலாளர் மரு.ஆஷனி, மாவட்ட பயற்சி குழு அலுவலர் மரு. முத்துராமலிங்கம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜசூர்யா, மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu