நெல்லையில் இன்னுயிர் காப்போம் திட்ட துவக்க விழா: சபாநாயகர் பங்கேற்பு
நெல்லையில் இன்னுயிர் காப்போம் திட்ட துவக்க விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய 17 குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளி கட்டடங்களில் தரம் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நெல்லையில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கட்டணமில்லா மருத்துவ உதவித் திட்டமான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நெல்லையில் நடைபெற்ற விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் 9 தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவ மனைகளுக்கான கடவுச்சொல்லை வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்வில் 3 பேருக்கு காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியதாவது:- தமிழகத்தின் எல்லைப் பகுதியில் விபத்து ஏற்பட்டால் உலகத்தில் எந்த பகுதியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது, நெல்லை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பள்ளி விபத்து துரதிர்ஷ்டவசமானது. உயிரிழந்த பள்ளி மாணவர்கள் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நெல்லை மாவட்டத்தில் 17 குழுக்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஆய்வு செய்ய பிரித்து அனுப்பபட்டுள்ளனர். இந்த குழுக்கள் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்யும்.
அதனை தொடர்ந்து அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு அதனை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும், அதிகாரிகளின் ஆய்வறிக்கையில் குறிப்பிடபட்டுள்ள குறைகளை செய்ய தவறும் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பிப்பார். பள்ளி விபத்தில் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தவறு செய்தது தெரியவந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu