நெல்லையில் ஊரடங்கை மீறி சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை!
வீட்டுப்பாட தண்டனையை நிறைவேற்றிய வாகன ஓட்டிகள்
கொரோனோவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை போல் இல்லாமல் தற்போது முழு ஊரடங்கில் போலீசார் பொதுமக்களிடம் பெரிய அளவில் கிடுக்கிப்பிடி காட்டவில்லை. இதனால் முழு ஊரடங்கு என்பதை மறந்து வாகன ஓட்டிகள் சகஜமாக சாலைகளில் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் நகரின் முக்கிய சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து வழக்கம்போல் அதிகரித்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகளிடம் போலீசார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தமிழக டிஜிபி அறிவுறுத்தி இருந்தார். இதனால் நெல்லையில் விதியை மீறி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இதற்கிடையில், பகல் 12 மணி வரை அத்தியாவசிய பொருட்களின் கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதனால் பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடைகளுக்கு செல்வதாக கூறி போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி விடுகின்றனர். இருப்பினும் நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளை உரிய விசாரணைக்கு பிறகே அனுப்புகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர்கள் ஜான் பிரிட்டோ மற்றும் சதீஷ் ஆகிய அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை மேம்பாலம் அருகில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் துணை ஆணையர் சீனிவாசன் ஒலிபெருக்கி மூலம் பேசி எச்சரிக்கை விடுத்தார்.
பின்னர் வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளை பிடித்து அவர்களுக்கு வீட்டு பாடம் எழுத வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார். அதாவது நாளை முதல் வெளியே வரமாட்டோம் ஊரடங்கு விதிகளை கடைபிடிப்போம் என்ற வாசகத்தை பத்து முறை எழுத வைத்தார். நெல்லையில் விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு நூதன முறையில் வீட்டு படம் மூலம் எழுத வைத்து துணை ஆணையர் தண்டனை வழங்கியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu