நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த செல்வகுமார் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த செல்வகுமார் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் 5 வது நபராக மீட்கப்பட்ட செல்வகுமார் உடல் உடற்கூறு பரிசோதனை முடிந்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி 15 லட்சம் ரூபாயை ஆட்சியர் விஷ்ணு அவரது தந்தையிடம் வழங்கினார்.
நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த 14ஆம் தேதி இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் சரிந்து விழுந்ததில் அந்த இடிபாடுகளில் குவாரியில் பணியாற்றிய 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மூவர் இந்த விபத்தில் பலியாகினர். இதில் இடிபாடுகளில் சிக்கி ஐந்தாவது நபரான நாங்குநேரி அருகே உள்ள காக்கைகுளத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் செல்வகுமார் கடும் சிரமத்திற்கு பின்னர் கடந்த 18- ந்தேதி மீட்கப்பட்டார். அவரது உடல் உடற்கூறு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து காலதாமதம் ஆகிய நிலையில், நேற்று செல்வகுமார் உறவினர்கள் ஆட்சியரிடம் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து உறவினர்கள் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர். இந்நிலையில் செல்வகுமார் உடல் நான்கு நாட்களுக்கு பின் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அரசு அறிவித்த 15 லட்சம் நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செல்வக்குமார் தந்தை மணியிடம் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu