குளத்தின் மறுகால் பாதையை உயர்த்தியதால் பயிர்கள் சேதம்: விவசாயி தற்கொலை முயற்சி
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
நெல்லை அருகே பொதுப்பணித்துறை அதிகாரியின் அலட்சியத்தால் 2 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கிய வேதனை தாங்க முடியாமல் விவசாயி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மாடன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பையா வயது 81. இவர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திற்குள் திடீரென தனது கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றினார். அவர் தீப்பெட்டி எடுத்து பத்த வைக்க முயற்சித்த போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த விவசாயி தன்னை விடுங்கள் இங்கு வாழ முடியவில்லை என அழுகுரல் கோஷம் போட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
இதுகுறித்து தீக்குளிக்க முயன்ற விவசாயி சுப்பையா கூறும்போது:- வீரவநல்லூர் அருகே உள்ள மாடங்குளம் அருகே 2 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருகில் உள்ள கூத்தாடி குளத்தின் மறுகால் செல்லக்கூடிய பாதையை பொதுப்பணித்துறை பொறியாளர் திடீரென இரண்டு அடி உயர்த்தி விட்டனர். இதனால் மாடன்குளத்துக்கு அதிக தண்ணீர் வருவதால் எனது வயலில் நான் நடவு செய்து உள்ள நெற்பயிர்கள் சுமார் 2 ஏக்கர் முழுவதும் நீரில் மூழ்கி அழுகி வருகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே அதிகாரியிடம் முறையிட்டோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நான் மனவேதனை அடைந்து இன்று ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ளேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தேன். பொறியாளரிடம் கேட்டால், மறுகாலை குறைக்க முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என அலட்சியமாக கூறுகிறார் என்று விவசாயி சுப்பையா வேதனையுடன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து விவசாயி சுப்பையாவிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் கடும் உரம் தட்டுப்பாடு காரணமாக நெல் பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் சூழலில் பொதுப்பணித்துறை அதிகாரியின் அலட்சியத்தால் இரண்டு ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதாக கூறி 80 வயது நிரம்பிய மூத்த விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சக விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu