நெல்லை: புலிகள், காடுகள் பாதுகாப்பு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில், சைக்கிள் பேரணியை, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் சார்பில், 75- வது வருட சுதந்திர இந்தியாவின் புலிகள் மற்றும் காடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணி நடைபெற்றது. பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் இருந்து தொடங்கிய பேரணியை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் வனத்துறையினர் மிதிவண்டி பேரணியில் கலந்துகொண்டனர்.
கள இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள், யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசிக்கின்றன. வளங்களை பாதுகாக்கும் விதமாக தற்போதைய தலைமுறைக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாகன பேரணி துவங்கி உள்ளது.
நெல்லையில் தொடங்கிய இந்த பேரணி, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக தமிழகத்திலுள்ள மற்ற ஒன்பது சரணாலயங்கள் வழியாக கர்நாடக மாநிலம் பந்திப்பூர் சரணாலயம் வரை செல்லும். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தற்போது 14 புலிகள் உள்ளன. யானைகளை பாதுகாப்பதற்கு அகத்தியமலை யானைகள் காப்பகம் செயல்படுத்த தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu