அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா: சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு
நெல்லையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது உள்ளபட அவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது என நெல்லையில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் 101 நபர்களுக்கு 41 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நெல்லை பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்:-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கைள அறிவித்து செயல்படுத்தி வருகிறார். முன்பு மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனைக்கு சென்று மாற்றுத்திறனாளி சான்று வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் ஊர் ஊராக சிறப்பு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தொடங்கிய இந்த திட்டம் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீ இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர் தான், திமுக அரசு எப்போதும் மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ரூ. 30.60 இலட்சம் மதிப்பில் 40 மாற்றுத்திறனாளிகளுக்கும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மடக்கு சக்கர நாற்காலி ரூ.1.08 இலட்சம் மதிப்பில் 14 மாற்றுத்திறனாளிகளுக்கும், மூன்று சக்கர சைக்கிள் ரூ. 45.90 ஆயிரம் மதிப்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரோலேட்டர் கருவி ரூ. 5 ஆயிரம் மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், எலக்ட்ரானிக் பிரைலி ரீடர் ரூ. 2.05 இலட்சம் மதிப்பில் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு என ரூ.41.77 லட்சம் மதிப்பில் 101 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன் , மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கனகராஜ், பாஸ்கர் , மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu