ஈகைப் பெருநாள் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் வாழ்த்துச் செய்தி

ஈகைப் பெருநாள் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் வாழ்த்துச் செய்தி
X
மாநில தலைவர் நெல்லை முபாரக்

ஈகை, அன்பு, கருணை, சகோதரத்துவம் உள்ளிட்ட நற்குணங்கள் மேலோங்கட்டும்! - எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவரின் ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள ஈகைப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில்

புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனிதமிகு ரமழானில் முப்பது நாட்கள் நோன்பிருந்து, முறையாக மறையோதி இறையோனை வணங்கி, இறையருளை பெற்று ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்கள் நோன்பிருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து, இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம்பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரமலானை கடைபிடித்துள்ளனர்.

அன்பு, கருணை, சகோதரத்துவம், ஈகை, பரஸ்பர நட்பு, பகிர்ந்து கொள்ளுதல், சமாதானம் போன்ற நற்குணங்களை நம்மிடையே புனித ரமலான் விதைத்துச் சென்றுள்ளது. அதுமட்டுமின்றி ஆண்டு முழுவதும் கடமையுணர்வோடும், கட்டுப்பாட்டுடனும் வாழ்வதற்கு மகத்தான பயிற்சியையும் தந்துள்ளது. இந்த நற்பண்புகள் நம்மிடம் மேலோங்கிட இறைவனை பிரார்த்திப்போம்.

கடந்த ஆண்டைப் போல கொரோனா பெருந்தொற்று எனும் பேரிடர் நம்மை சூழ்ந்திருக்கும் காலக்கட்டத்தில், பெரும் துயரில் தவித்த மக்களுக்கு ரமலான் மாதத்தில் மேற்கொண்ட உதவிகள் பேருதவியாக அமைந்தன என்றால் அது மிகையாகாது.

பசித்தோருக்கு உணவளியுங்கள், நோயுற்றவரை நலம் விசாரியுங்கள், நலிவடைந்தவர்களுக்கு உதவி புரியுங்கள், அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள் என்று இஸ்லாம் எடுத்துரைத்துள்ள சகோதரத்துவம் இந்த கொரோனா பேரிடரின் போது நம்மிடம் மேலோங்கி இருந்ததை காணமுடிந்தது.

வறியவர்களுக்கு உதவிடுவோம். ஏழைகளின் கண்ணீரை துடைத்திடுவோம். மதநல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையையும் காத்திடுவோம். உற்றார் உறவுகளுடன் இன்பமுடன் இந்நாளில் மகிழ்வது போல், வாழ்நாள் முழுவதும் மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

மேலும், ஒட்டுமொத்த உலகையும் ஸ்தம்பிக்கச் செய்துள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிபெறவும், கொரோனா இல்லாத உலகம் அமையவும் அனைவரும் இருகரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இவ்வாறு அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!