திருநெல்வேலியில் குடிநீர் விநியோகம் கோரி பொதுமக்கள் சாலைமறியல்
குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
திருநெல்வேலி மாநகராட்சியில் 55 வார்டுகளின் கீழ் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம் ஆகிய நான்கு மண்டலங்களிலும் புறநகர் குடியிருப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. மாநகராட்சியின் மொத்த குடிநீர்த் தேவையையும் தாமிரபரணி நதியே தீர்த்து வருகிறது. சுத்தமல்லி, கொண்டாநகரம், குறுக்குத்துறை, மணப்படைவீடு, திருமலைகொழுந்துபுரம், தீப்பாச்சியம்மன் கோயில், கருப்பந்துறை, அரியநாயகிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள தலைமை நீரேற்று நிலையங்களில் மொத்தமுள்ள 50 உறைகிணறுகளின் மூலம் குடிநீர் சேகரிக்கப்பட்டு நன்கு சுத்திகரிக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி விநியோகிக்கப்படுகின்றன.
வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் தாமிரபரணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அனைத்து உறைகிணறுகளும் வெள்ளத்தில் மூழ்கின. பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீரேற்று நிலையங்களுக்கு மின்விநியோகமும் நிறுத்தப்பட்டது.
இதனால் கடந்த 17 ஆம் தேதி முதல் திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் இல்லை. மாவட்டம் முழுவதும் 70 கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலியில் பாளையங்கோட்டை, தச்சநல்லூர் மண்டலத்தில் குடிநீர் விநியோகம் சீராகிய நிலையில், திருநெல்வேலி மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களின் பல இடங்களில் 15 நாள்களாகியும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.
மாநகராட்சி லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகித்தாலும், குடியிருப்புகளுக்கு முறையாக போய்ச்சேரவில்லை. திருநெல்வேலி நகரத்தில் தடிவீரன் கோயில் மேல தெரு, கீழத்தெரு, சாமியார்தைக்கா பகுதியில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப் பகுதியில் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகிக்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் குடிநீர் வழங்காக மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருநெல்வேலி-தென்காசி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகளும், திருநெல்வேலி நகர காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் குடிநீர் வராத பகுதிகளுக்கு லாரி மூலம் தற்காலிகமாக குடிநீரும் விநியோகிக்கப்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu