நெல்லையில் திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் : பொது செயலர் அறிவிப்பு..!
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன். (கோப்பு படம்)
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் சரவணன் நிறைவேற்றித் தருவதில்லை என்று ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது.
அத்துடன், அடிக்கடி மாமன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதும், ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பதும் தொடர்ந்து நடந்தது வந்தது. இதனால், மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையில் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது.
நெல்லை மாநகராட்சியில் கடந்த 21ம் தேதி நடந்த பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், குடிநீர், சாலை உட்பட அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு மேயர் முன்னுரிமை கொடுப்பதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன், அவர் மீது முறைகேடு புகார்களையும் கூறினார். பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அவசர கூட்டத்தைக் கூட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 பேர் உட்பட 4 பேர் திமுகவில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள அறிவிப்பில் கவுன்சிலர்கள் பவுல்ராஜ், மன்சூர், ரவீந்தர் மற்றும் மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் திமுக மேயர் பங்கேற்காததைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையால், மேயருக்கு எதிராக தொடர்ந்து போர்க்கொடி தூக்கிவந்த ஆளும் கட்சி கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu