கைலாசநாதர் கோவில் தேரை புதுப்பித்து மீண்டும் தேரோட்டம் நடத்த கோரிக்கை
முழுவதுமாக சிதலமடைந்து புதர்கள் மண்டி காணப்படும் கைலாசநாதர் தேர்
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேரோட்டத்திற்காக ஏங்கி நிற்கும் பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் தேர். 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் மீண்டும் தேரோட்டம் நடைபெறுமா?. மக்கள் வேதனையுடன் கோரிக்கை.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருந்து 3 கி.மீ தொலைவில் இயற்கை சூழல் நிறைந்த கிராமம் பிரம்மதேசம். இவ்வூரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ கைலாசநாதர் எனும் சிவசுயம்பு லிங்கத்தை பிரம்மாவின் பேரன் (ரோமச முனிவர்) பூஜை செய்ததால் பிரம்மதேசம் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. தென் தமிழக நவக்கிரக தலங்களில் சூரியன் தலமாக விளங்குகிறது. இக்கோவிலின் முன்வாயில் கோபுரம் ஏழு நிலைகளுடனும், முன்புறம் பிரம்ம தீர்த்தம் குளமும் அமைந்துள்ளது.
அக்காலத்தில் அன்னியர்கள் படையெடுப்பு காலங்களில் ஊர் மக்கள் இந்த கோவிலுக்குள் அடைக்கலம் புகுந்து விடுவர். பூட்டியிருக்கும் வாயிற்கதவை எதிரிகள் படை யானைகளைக் கொண்டு முட்டி திறக்கச் செய்வார்களாம். அப்போது கதவில் மிக நெருக்கமாக அமைந்துள்ள குமிழ் ஆணிகள் யானையின் நெற்றியை கோரப்படுத்தி விடுவதால் யானையாலும் தகர்க்க முடியாததாக இக்கதவுகள் அமைந்துள்ளது. இக்கோவிலின் சுற்று மதிற்சுவர்கள், மிக உயரமாகவும், அகலமாகவும் அமைந்துள்ளது. இக்கோவில் மக்களின் போர்க்கால காப்பகமாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சித்திரைப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகியன முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. சுவாமியிடம் நினைத்து வேண்டும் வரம் அருள்பாலிக்கும் . பிரம்மதேசத்தில் ஓடும் கடனாநதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி கைலாசநாதரை வலம் வருவதால் காசிக்கு சென்று சிவ தரிசனம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்கப் பெறுகின்றதோ அப்புண்ணியம் இக்கோவிலில் கிடைக்கும்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்த புண்ணிய தலமாகவும் வணங்கப்படும் இக்கோவில் தற்போது எழிலை இழந்து வருவது கிராம மக்களிடையே வேதனையை எற்படுத்தியுள்ளது. ஏழு அடுக்கு கோபுரத்திலும் செடிகள் புதர்கள் போல் வளர்ந்து வருகிறது. தூய்மைபடுத்தப்படாத பிரம்ம தீர்த்த குளம் என எழில் இழந்து வருவது காணும் பக்தர்களை மன வேதனைக்குள்ளாக்குகிறது. கோவிலுக்கு வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளும் கோவில் கோபுரத்தையும், சிதலமடைந்த தேரையும் பார்க்கும் போது மன வேதனைக்குள்ளாவது உண்மை தான்.
40 ஆண்டுகளுக்கும் முன் 1978 ம் ஆண்டு தேரோட்டம் நடைபெற்றதாவும், அதன் பின் தேரோட்டம் நடக்காமல் தேர் முழுவதுமாக சிதலமடைந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டது.
இந்நிலையில் விரைவில் மீண்டும் தேரோட்டம் நடைபெற தமிழக அரசு அறநிலையத் துறை மூலம் உயரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கையாக தெரிவிக்கின்றனர்.
இக்கோவில் அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. இதற்கு ஆண்டாண்டு காலமாக கோவில் நிலங்கள், கட்டடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருபவர்களிடம் பெறும் பணத்தில் கோவிலை புனரமைப்பு செய்திட அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எல்லாருடைய எண்ணமாக இருக்கிறது. விரைவில் தமிழக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu