பூட்டிய வீடுகளில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த 2 பேர் கைது

மீட்கப்பட்ட நகைகள்
திருச்சி மாநகரில் சமீப காலமாக திருட்டு சம்பவம் அதிகரித்த நிலையில், திருடர்களை கண்டுபிடிக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் காவல் துணை ஆணையர் முத்தரசு மேற்பார்வையில் பொன்மலை குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாநகரில் கே.கே.நகர் பகுதிகளில் கடந்த 14.08.2021 மதியம் பூட்டியிருந்த வீடு, வீட்டின் கதவு, உடைக்கப்பட்டிருந்ததாக வீட்டின் உரிமையாளர் 16.08.2021-ம் தேதி வீட்டில் வைத்திருந்த வைரம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கொடுத்த புகாரை பெற்று கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இக்குற்ற சம்பவத்தை போன்று கே.கே.நகர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற திருட்டு மற்றும் சமீபத்தில் சிறையிலிருந்து விடுபட்ட குற்றவாளிகள் பட்டியல் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு புலன் விசாரணை தீவிரபடுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் தனிப்படையினர் வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்குபின் முரணாக பேசினர். மேலும் அவர்களை விசாரித்ததில், எடமலைப்பட்டிபுதூர், இந்திராநகரைச் சேர்ந்த முருகன் (24) மற்றும் கே.கே.நகர், தென்றல்நகரைச் சேர்ந்த அபுதாகீர் (33) ஆகியோர் என தெரிய வந்தது.
மேற்படி முருகன் என்பவர் மீது திருச்சி மாநகர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு திருட்டு
வழக்குகளில் ஈடுபட்டு சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். என்பதும், மற்றொரு நபரான அபுதாகீர் மாத்தூர் காவல்நிலைய பகுதியில் ஒரு கொலை வழக்கில் சிறையிலிருந்த போது மேற்படி முருகன் என்பவரது தொடர்பு ஏற்பட்டுள்ளது. முருகன் தனக்கு கே.கே.நகர் பகுதியில் பூட்டப்பட்ட வசதியான வீடுகளை அடையாளம் காண்பித்தால் இருவரும் சேர்ந்து கொள்ளையடித்து பெரும் லாபம்
சம்பாதிக்கலாம் என திட்டமிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் சிறையிலிருந்த வெளிவந்த முருகன் மற்றும் அபுதாகீர் ஆகிய இருவரும் கே.கே.நகர் பகுதியில் கடந்த ஜுலை மாதம் ஜெயாநகரிலும், ராஜாராம் சாலையில் மற்றும் லூர்துசாமி பிள்ளைத்தெரு ஆகிய இடங்களில் உள்ள பூட்டப்பட்டிருந்த வீடுகளில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.
மேலும் அவர்களை கைது செய்து மேற்படி மூன்று வழக்குகளில் அவர்கள் கொள்ளையடித்த ரூபாய் பதினான்கு லட்சம் (ரூ.14,00,000/-) மதிப்புள்ள 48 பவுன் தங்க நகைகள், ரொக்க பணம் ரூ.25,000/- குற்ற செயல்களுக்கு பயன்படுத்திய 2 கடப்பாறை 1 இருசக்கர வாகனம் மற்றும் லூர்துசாமிபிள்ளை தெருவில் உள்ள வீட்டில் கொள்ளையடிக்கும் போது போலீசாரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக அவ்வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டுடிஸ்க்கையும் பறிமுதல் செய்து எதிரிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனா்.
மேற்படி திருட்டில் ஈடுபட்ட 2 குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் பதினான்கு இலட்சம் மதிப்புள்ள 48 பவுன் தங்க நகைகள், பணம் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்த கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினா் ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu