திருச்சி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மார்பகப் புற்றுநோயானது தமிழகத்தை பொறுத்தவரையில் 2016-ல் 9,200 -ஆக இருந்து தற்போது 12,300 -ஆக உயர்ந்துள்ளது. மேலும் முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரும் இந்த நோயானது தற்போது 30 - 40 வயதுகளிலேயே வந்து விடுகிறது.
எனவே இந்த மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் வருடந்தோறும் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சமூக இடை வெளியுடன் பிங்க் நிற பலூனை காற்றில் பறக்க விட்டு, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தலைமை தாங்கினார். மேலும் மார்பக புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வு புத்தகங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டீன் வனிதா, பெண்கள் மார்பக புற்றுநோய் குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோய் கண்டறிந்த பட்சத்தில் ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். பரிசோதனையில் புற்றுநோய் தென்பட்டால் அதை குணப்படுத்திவிட முடியும். புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றால் அரசு மருத்துவமனையில் அதற்கான உபகரணங்கள் உள்ளது. மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணம். உடல் எடையை கட்டுக்குள் வைக்க பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தாய்மார்கள் மாட்டு பால் கொடுக்காமல் தாய்ப்பால் கொடுத்தால் புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். புற்றுநோய்க்கு என மேமோகிராம் என்ற புதிய கருவி இன்னும் ஒரு சில மாதங்களில் தலைமை அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தவுள்ளோம். அதேபோல புற்று நோயாளிகளுக்கு ரேடியோ தெரபி என்ற கதிர்வீச்சு முறையும் அறிமுகம் செய்யப் போகிறோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu