திருச்சி மாநகராட்சி விஸ்தரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு
திருச்சி மாநகராட்சி விஸ்தரிப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடந்தது.
திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படும் என சட்டசபையில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு பல கிராமங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆங்காங்கே போராட்டங்கள், முற்றுகைகள் என தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இன்று இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்ற. இந்த கூட்டத்திற்கு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ பழனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. காரசாரமாக நடைபெற்ற இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் மாநகராட்சி விரிவாக்கத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் என மக்கள் மாறி, மாறி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு சிலர் நன்றியை தெரிவித்தனர்.
மற்றொரு தரப்பினர் தங்களது பகுதிகள் பெரும்பாலும் நீர் நிலைகளை கொண்டிருப்பதால், விவசாயத்தை நம்பி இருக்கிறோம் என்றும், இந்த விரிவாக்க பணி நடைபெற்றால் தங்கள் விவசாய நிலம் பாதிக்கப்படும் எனவும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்த கருத்துக்களை கேட்டுக்கொண்ட திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு மக்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், ஊராட்சியில் சுமார் 75% நிலங்கள் விவசாய நிலங்களாக இருந்தால் கண்டிப்பாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் விரிவாக்கப் பணிகள் இருக்கும் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu