திருச்சி விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அடாவடி வசூல்
திருச்சி விமான நிலையம் பார்க்கிங் பகுதி.
திருச்சி விமான நிலையத்திற்குள் வந்து செல்லும் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா இலங்கை துபாய் சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.
இதுதவிர, சென்னை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரூ.850 கோடியில் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து 'வந்தே பாரத் ' திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளை அழைத்துச் செல்வதற்கும், இறக்கி விடுவதற்கும் அதிகளவில் வாகனங்கள் விமான நிலையத்திற்குள் வந்து செல்கிறது.
இவ்வாறு வந்து செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு விமானநிலைய ஆணையத்தின் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் வாகன நுழைவு மற்றும் நிறுத்துமிடம் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்குள் இருசக்கர வாகனம் நுழைவதற்கு முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.10 மற்றும் 30 முதல் 120 நிமிடம் வரை ரூ.15 வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் இருசக்கர வாகனம் உள்ளே நுழைந்தாலே குறைந்தபட்சமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது.
இதேபோன்று வாடகை கார்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு பயணிகளை ஏற்றுவதற்கு இறக்குவதற்கு கட்டணம் இல்லை என்றும், முதல் 30 நிமிடங்களுக்கு ரூ.20 வசூலிக்க வேண்டும் எனவும், 30 முதல் 120 நிமிடங்களுக்கு ரூ.40 வசூல் செய்ய வேண்டும் என விமானநிலைய ஆணையத்தின் சார்பில் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், நான்கு சக்கர வாகனங்கள் விமான நிலையத்திற்குள் நுழைந்தாலே ரூ.40 குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டுநர்கள் அதிக சிரமங்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருவதால் விமான நிலைய ஆணைய குழு இதற்கு உடனடி தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu