திருச்சியில் ஏற்றுமதியாளருக்கு கருத்துப்பட்டறை: கலெக்டர் துவக்கி வைத்தார்
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி பற்றிய விளக்க கையேட்டினை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டார்.
சுதந்திரம் பெற்று 75ஆவது ஆண்டினை கொண்டாடும் விதத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், வெளிநாட்டு வணிக இயக்குனரகம் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான கருத்துப் பட்டறை மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் குறித்த திட்ட விளக்கக் கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள், அதற்கான கட்டமைப்புகள், அரசின் திட்ட உதவிகள், இயற்கை விளைபொருட்களில் இருந்து உப பொருட்கள் தயாரித்தல், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் குறித்து எடுத்துரைத்து, அரசின் முன்னேற்றமான திட்டங்களைப் பயன்படுத்தி, முன்னேற்றம் கண்டு, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி, தங்களது தொழில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து தொழில் நிறுவனங்கள் உயர்வடைந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாழையிலிருந்து உற்பத்தி செய்யக் கூடிய பொருட்கள் அவற்றுக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டின் சந்தை வாய்ப்புகள், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் உள்பட பல்வேறு தொழில்களின் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் குறித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளர் சுசில்குமார்,நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன் கார்த்திக் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu