திருச்சி ஆர்.பி.எப்.சார்பில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி
திருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் கொரோனா விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடந்தது.
சுதந்திர இந்தியாவின் 75-வது தினத்தை முன்னிட்டு, அசாதிகா அம்ரித் மகோட்சவ்' என்ற வெற்றி கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி கே.கே.நகர் காஜாமலை பகுதியில் உள்ள ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று காலை (கோவிட் 19) கோரோனோ நோய்தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. இந்த வாகன பேரணியை 5-வது பட்டாலியன் கமாண்டிங் ஆபீசர் அஜய் ஜோதி ஷர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அசாதிகா அம்ரித் மகோட்சவ் விழாவை ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்கள் ரத்ததானம் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும், ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உணவு வழங்கியும் கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து இன்று கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்கள்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்றும், கைகளை சுத்தமாக கழுவியும், இருக்கும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி முககவசம், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணி திருச்சி காஜாமலை ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கி மன்னார்புரம் சிக்னல் வழியாக ரயில்வே ஜங்ஷன், தலைமை தபால் நிலைய சாலை, கண்டோன்மென்ட், வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா, கலெக்டர் அலுவலக சாலை, அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மீண்டும் ஆர்.பி.எப். பயிற்சி பள்ளி வளாகத்தை அடைந்தது.
இந்தப் பேரணியில் 100-க்கு மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிக்கு கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu