திருச்சியில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் இம்மானுவேல் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
பின்னர் அவர்கள் கலெக்டர் சிவராசுவை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் சுமார் 12 ஆயிரம் கிராம உதவியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.11 ஆயிரத்து 100 முதல் ரூ.35 ஆயிரம் என்ற ஊதிய ஏற்ற முறையில் பணியாற்றி வருகின்றனர். இதில் 2003-ஆம் ஆண்டிற்கு முன் பணியில் உள்ள கிராம உதவியாளர்களுக்கு ஜி.பி.எப். பிடித்தம் செய்து பழைய பென்ஷன் திட்டத்தில் பணி புரிந்து வருகின்றனர்.
கடந்த 1995-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி அரசாணை எண் 625-இன்படி, தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வந்த கிராம உதவியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தில் முழுநேர ஊழியர்களாக பணி அமர்த்தப்பட்டனர். இந்த அரசாணை எண் 625 ஏனைய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய அனைத்து பண பயன்களும் பெறக்கூடிய தகுதி உடையவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 2003-க்கு முன் பணியில் இணைந்த கிராம உதவியாளர்களுக்கு ஜி.பி.எப்.எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழும், 2003-க்கு பிறகு பணியமர்த்தப்பட்டவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டமான சி.பி.எஸ். எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழும் பணம் பிடித்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பணி முதிர்வின் போது பணப் பயன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் புதிய ஓய்வூதியத் திட்டமான சி.பி.எஸ். திட்டத்தின் கீழ் பணி அமர்த்தப்பட்ட கிராம உதவியாளர்களுக்கு சி.பி.எஸ். ஓய்வூதிய பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையரால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த மாதம் 18-ந்தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரசு ஊழியர்களும் புதிய பென்ஷன் திட்டமான சி.பி.எஸ்.திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டமான ஜி.பி.எப். திட்டமே வேண்டும் என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் சி.பி.எஸ். திட்டமும் ரத்து என்பது எங்களைப் போன்ற மிகக் குறைந்த ஊதியம் பெறுகிற ஊழியர்களுக்கு மிகவும் மன வேதனையாக உள்ளது.
ஆகவே பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப் படுத்தும் வரை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் அனைத்து கிராம உதவியாளர்களுக்கும் புதிய பென்சன் தொடர உத்தரவு வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu