திருச்சி மாவட்டத்தில் 12ம் தேதி மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக கலெக்டர் சிவராசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற 12-ம் தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின் அடிப்படையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் வருகிற 12-ம் தேதி மாவட்டத்தில் 650 தடுப்பூசி முகாம்கள் மூலம் 1லட்சத்து 37 ஆயிரத்து 500 மக்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால் ஊரக பகுதிகளில் வட்டாரம் வாரியாகவும், நகர்ப்புற பகுதிகளில் கோட்டம் வாரியாகவும் முகாம்கள் நடைபெறுவதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கலெக்டர் 'மாவட்டத்தில் வட்டார அளவில் அனைத்து தரப்பினரும் உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைத்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் கொரோனா பரவலை தடுத்திடும் இந்த முகாமினை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.
பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் சுப்ரமணி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வனிதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu