தமிழக கோயில்களில் விரைவில் அறங்காவலர் நியமனம்-அமைச்சர் சேகர் பாபு பேட்டி

தமிழக கோயில்களில் விரைவில் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் சேகர்பாபு திருச்சியில் கூறினார்.

சமயபுரம், திருத்தணி, திருச்செந்தூர் கோயில்களில் வரும் 16-ம் தேதி முதல் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான ஆயத்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று சமயபுரம் கோயிலுக்கு வந்தார்.

அங்கு அன்னதானக்கூடத்தை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கியபின், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள யானை குளிக்கும் தொட்டியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், சேகர்பாபு கூறியதாவது/

அறநிலையத்துறையில் யானைப்பாகன்கள் முதல் அனைத்துப்பிரிவுகளிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக அடிப்படையில் பணியாற்றுவோர் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அவ்வாறு பணி நிரந்தரம் பெறுவோருக்கான வயது வரம்பை மாற்றியமைத்து அதிக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த போதும் அதை நடைமுறைப்படுத்தாமலேயே அந்த அரசு விட்டு விட்டது.

புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழகம் முழுவதும் இதுவரை 180 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிலிருந்த ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தமிழகக் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாததால் பணிகளில் ஏதும் தொய்வு இல்லை. அனைத்துக் கோயில்களுக்கும் தக்கார்கள் நியமிக்கப்பட்டு பணிகள் குறைவின்றி நடந்து வருகின்றன. எனினும் புதிய அறங்காவலர்கள் விரைவில் நியமிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் அக்கரையோடு உள்ளார். அதற்காக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு அதன் அடிப்படையில் இனிவரும் காலங்களில் அறங்காவலர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்பதற்குப்பதில் 2 ஆண்டுகள் என்று மாற்றியமைக்கப்படும்.

இந்த முறையில் அதிக இறையன்பர்களுக்கு ஆன்மிக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும். கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கை அடிப்படையில் மயிலாடுதுறை உள்ளிட்ட சில ஊர்களில் கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு பின்னர் கோர்ட் உத்தரவுப்படி அது ரத்து செய்யப்பட்டுவிட்டது.எனவே கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவது சாத்தியமில்லை.

அறநிலையத்துறை அமைச்சருடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, .ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, அறநிலையத்துறை ஆணையர் குமரகுரு, மண்டல இணை ஆணையர் சுதர்சன், சமயபுரம்கோயில் இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையர் கந்தசாமி, திருவானைக்காவல் கோயில் உதவி ஆணையர் மாரியப்பன் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

Tags

Next Story