இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நீட் எதிர்ப்பு மாநாடு

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நீட் எதிர்ப்பு மாநாடு
X

திருச்சியில் நடந்த நீட்  எதிர்ப்பு மாநில மாநாட்டில் வெங்கடேசன் எம்.பி. பேசினார்.

திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நடந்த நீட் எதிர்ப்பு மாநாட்டில் 2 எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்திய மாணவர் சங்கம் சார்பில், நீட் எதிர்ப்பு மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் வரவேற்றார்.

மாநாட்டின் தொடக்கமாக திருச்சி பெரியார் சிலையில் இருந்து பேரணியாக வந்த மாணவர்கள், நீட் தேர்வால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாநாட்டை பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொறுப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடங்கி வைத்து பேசினார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான உரிமையும், திறனும், திராணியும் தமிழகத்திற்கு உண்டு என்பதை நிருப்பிக்கின்ற அமைப்பு தான் இந்திய மாணவர் சங்கம். நீட் தேர்வு ரத்தாகுமா? இல்லையா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் அலசி ஆராயட்டும். நீட் வேண்டாம் என்று மாணவர்கள் போராட்டங்களை நடத்தி வெல்ல வேண்டும்.

மும்மொழி கொள்கையை ஏற்கமுடியாது என ஒற்றை மாநிலமாக தமிழகத்தில் இருந்து நாம் கூறினோம். இருமொழி கொள்கை தான் இருக்கும் என நிரூபித்த சக்தி தமிழகத்தின் மாணவர்கள் சக்தி. அதிகார மையம் என்றாவது மக்களுக்காக ஏதாவது செய்திருக்கின்றதா? அப்படி செய்திருந்தால் அதன் பின் போராட்டக்காரர்களின் கை உயர்ந்து இருக்கும்.

தமிழகத்திற்கு நீட் விலக்கு வேண்டும் என்பதற்கு 100 காரணங்கள் இருக்கின்றது. நீட் என்ற திரிசூலத்திற்கு 3 முனைகள் உள்ளன. ஒரு முனை மாநில உரிமைகளையும், மாநில கல்வி முறையை குத்தி கிழிக்கின்றது. இரண்டாவது முனை டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது. மூன்றாவது முனை மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்து தற்கொலைக்கு தூண்டுகிறது. நீட் தேர்வு என்பது, 4000 மாணவர்களின் மருத்துவப்படிப்பு சேர்க்கை சம்பந்தப்பட்டது இல்லை. தமிழகத்தின் உரிமை, மாநில சுயாட்சி, கூட்டாட்சி சம்பந்தப்பட்டது. மேலும் இங்கு காலங்காலமாக கட்டமைக்கப்பட்டுள்ள மருத்துவ வசதி சம்பந்தப்பட்டது.

இந்திய அளவில், தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் 63 சதவீதம் மகப்பேறு பிரசவம் நடக்கிறது. குஜராத்தில் 31 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 27 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் நடைபெறுகிறது. இந்த ஒற்றைப் புள்ளி விபரம் போதும், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு குறித்து எடுத்து கூறுவதற்கு. நீட் பிரச்சனையில் மத்திய அரசு பின்வாங்கும் வரை தமிழ் சமூகம் ஒருபோதும் தனது போராட்ட மரபை கீழே விடாது என்பதை மாணவர்கள் மீண்டும், மீண்டும் நிருபிக்க வேண்டும் என்றார்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளை பார்த்துவிட்டு, ஒரு சில மாநிலங்களை சேர்ந்தவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். ஒரு காலத்தில் சாதியைக் காட்டி கல்வியை மறுத்தார்கள். இப்போது சட்டத்தைக் காட்டி கல்வியை மறுத்து வருகிறார்கள். இதற்கு முடிவு கட்டும் அதிகாரம் மக்களிடம் இருக்கிறது. இதற்கு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி, மாணவர்களையும், பொதுமக்களையும் அணி திரட்ட வேண்டும். இதற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடம் கருத்து பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியைப் போல நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும் முன்னெடுத்து வெற்றி பெற வேண்டும். நீட் தேர்வு சட்டமாக்குவது குறித்த மசோதா மாநிலங்களவையில் வந்தபோது நீட், நெக்ஸ்ட் கூடாது என்ற திருத்தத்தை நான் கொண்டு வந்தேன். அதை குரல் வாக்கெடுப்பிற்கு விட்டனர். தி.மு.க.வில் வெறும் 4 எம்.பி.க்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் 4 எம்.பி.க்கள் இருந்த நிலையில், திருத்தத்தை ஆதரித்து 88 ஓட்டுகளை பெற்றோம். ஆனால், 13 எம்.பி.க்களை வைத்திருந்த அ.தி.மு.க. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது. அ.தி.மு.க.வும் வாக்கெடுப்பில் பங்கேற்று இருந்தால், மாநிலங்களவையில் நீட் சட்டமே நிறைவேறி இருக்காது என்றார். இதில் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதை தொடர்ந்து மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட துணை செயலாளர் சூர்யா நன்றி கூறினார். மாநாட்டில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!