விவசாயிகளுக்கு ஆதரவாக வாகன பேரணி

விவசாயிகளுக்கு ஆதரவாக வாகன பேரணி
X

புது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து கட்சிகள் இணைந்து திருச்சியில் இருசக்கர வாகனப் பேரணியை காவல்துறை தடையையும் மீறி நடத்தினர்.

மூன்று புதிய வேளாண் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தேசியக் கொடியை ஏந்தி இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது.டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து இரு சக்கர வாகனங்களில் பேரணி நடத்துவதாக அறிவித்தனர். இதன்படி விவசாயிகள் சங்கத்தினர், அனைத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் அனைத்துக் கட்சியினர் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே கூடினர்.

ஆயிரக்கணக்கானோர் மோட்டார் பைக்குகளில் பேரணிக்குச் செல்ல ஆயத்தமாகினர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் தலைமையில் சுமார் 200க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தள்ளுமுள்ளுக்கு பிறகு பேரணியாக சென்று நிறைவு செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business