திருச்சி சாலை மறியல் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருச்சி சாலை மறியல் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
X

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, கடந்த 10 மாதத்திற்கு மேலாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் திட்டத்தை கைவிடக் கோரி பல்வேறு கட்சிகள் அமைப்புகள் சார்பில் நாடு தழுவிய அளவில் பாரத் பந்த் போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சி.ஐ.டி.யு, தொ.மு.ச, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.சி.சி.டி.யு, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் சங்கம், சமூக நீதிப் பேரவை, தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், திருச்சி சிங்காரத் தோப்பு பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் முன்பாக மேலப்புலிவார்டு ரோட்டில் காலை முதலே ஒன்று திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக தெப்பக்குளம் தபால் நிலையம் வரை சென்று சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால், பேரணியாக வந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் செய்தவர்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர்.

பின்னர் அவர்களை போலீசார் பல்வேறு பேருந்துகளில் ஏற்றி திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள சிதம்பரம் மஹாலில் அனைவரையும் தங்க வைத்தனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று காலை முதல் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது மேலும் இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் திருச்சி மாநகரில் உள்ள ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!