சேலம் மாணவர் தற்கொலை துரதிர்ஷ்டமானது- திருச்சியில் எச். ராஜா பேட்டி
பாரதியார் நூற்றாண்டு நினைவு நாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான பேச்சுப் போட்டி திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு
காசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தமிழ் மொழி, தமிழறிஞர்கள் குறித்து உலக அரங்கில் பிரதமர் மோடி தொடர்ந்து பெருமையாக பேசி வருகிறார்.
நீட் தேர்வு காரணமாக சேலத்தில் மாணவர் தனுஷ் தற்கொலை செய்து கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது. இதுபோல் யாரும் முடிவெடுக்க கூடாது. தேர்வு பற்றி பயப்படக்கூடாது என பிரதமர் மோடி கடந்த 7 ஆண்டுகளாக பேசி வருகிறார்.
ஆனால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் நீட் தேர்வு குறித்து பேசியதுகூட இந்த தற்கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அரசியல் தலைவர்கள் கட்டுப்பாட்டுடன், அறிவாற்றலுடன் செயல்பட வேண்டும்.
கடந்த 4 மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அரசியல் சட்டப்புரிதல் இல்லாத, முதிர்ச்சியற்றதாக உள்ளது. நீட் விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறியதற்கு பிறகு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. அரசின் அதிகார வரம்பை மீறி, மத்திய அரசுக்கு எதிராக மக்களிடத்தில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்து கொள்கிறார். இதைக் கண்டிக்கிறோம்.
இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக 7.6.2021-ல் சென்னை உயர்நீதிமன்றம் 75 கட்டளைகளை தமிழக அரசுக்கு பிறப்பித்துள்ளது. அவற்றை 12 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஆனால் இன்றுவரை எந்த கட்டளையும் நிறைவேற்றப்படவில்லை.
சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் பாப்பான்சத்திரம் என்னும் ஊரில் காசி விசுவநாதர் கோயிலுக்குச் சொந்தமான 177 ஏக்கர் நிலத்தில் தனியார் வர்த்தக நிறுவனம், தனியார் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலத்தை 24 மணி நேரத்துக்குள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மீட்டுவிட்டால், அதன்பின் காலம் முழுவதும் நான் அறநிலையத்துறை பற்றியே பேசமாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu