காவல்துறை மீதான புகார்களே மனித உரிமை ஆணையத்திற்கு அதிகம் வருகிறது -நீதிபதி துரைஜெயச்சந்திரன்
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதியரசர் துரை ஜெயச்சந்திரன் பேட்டியின் போது.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதியரசர் துரை ஜெயச்சந்திரன் இன்று திருச்சி வருகை தந்ததுடன், அரசு விருந்தினர் மாளிகையில் மனித உரிமைகள் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் பல வழக்கறிஞர்கள் மற்றும் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆணைய உறுப்பினர் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் கூறியதாவது :
இன்றைய தினம் 51 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 25 வழக்குகளில் உறுப்பினர்களை அழைத்து விசாரித்து பதில் தரும்படி கேட்டுள்ளோம், எஞ்சிய வழக்குகளில் 2வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்குவதற்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் தினசரி ஆணையத்திற்கு 70 முதல் 100 வரையிலான மனுக்கள் வருகிறது. அதுமட்டுமன்றி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி வாயிலாக முக்கிய சம்பவங்கள் குறித்து ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை எடுத்து விசாரித்து வருகிறது. அதற்கு தீர்வு காணப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சில வழக்குகள் பாதிக்கப்பட்ட நபர்களால் உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெறுவதால் இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்க முடியாத நிலை உள்ளது.
ஆணையத்திற்கு காவல்துறையின் மீது அதிகமான வழக்குகள் வருகின்றது. இதில் பாதி வழக்குகள் பொய்யான வழக்குகளாகவே உள்ளது. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கில் காவல்துறையின் மீது ஆணையத்திடம் புகார் அளிக்கின்றனர். முறையான விசாரணை செய்து பொய்யான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அதனை தள்ளுபடி செய்து நியாயமான நீதியை வழங்க கூடிய நிலையில் ஆணையம் உள்ளது.
இதுவரை 341 வழக்குகள் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது, காவல்துறையினரை அடுத்து வருவாய்த்துறையினர் மீதும் புகார்கள் அதிகம் உள்ளது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு உரிய இழப்பீடுகள் வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டு, அரசும் இழப்பீட்டு தொகை வழங்கி உள்ளது.
ஆண்டுதோறும் ஆணையத்திற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, முன்பு 6 ஆயிரம் வழக்குகள் வந்தநிலையில் தற்போது 12ஆயிரம் வழக்குகள் வருகிறது. நடப்பாண்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பத்திரிக்கை, தொலைக்காட்சி மூலம் பொதுமக்களிடத்தில் மனித உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அசம்பாவிதம், அதிகாரிகள் அத்துமீறல் குறித்தும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் வெளிவந்து ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பாக உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu