திருச்சியில் நுகர்பொருள் வாணிப கழக சி.ஐ.டி.யு. வாயிற் கூட்டம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சி.ஐ.டி.யு. பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி மண்டல அலுவலகம் முன் கவன ஈர்ப்பு கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மண்டலத் தலைவர் வேலு தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கந்தவர்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு கண்டன விளக்க உரை ஆற்றினார்.
12 (3) ஒப்பந்தத்தின்படி 2012-ஆம் ஆண்டு பருவகால பணியாளர்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர் ஆணையரின் (சமரசம்) உத்தரவின்படி இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். கிடங்குகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்கள், கணினிப் பிரிவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். கிடங்குகளில் பணி செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு எப்.சி.ஐ.-க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி இஎல் சரண்டர் ஊதியம், எல்டிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இறுதியாக சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில் மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை துன்புறுத்துகிறது. இந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போல், தொழிலாளர்களுக்கு எதிரான 44 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டங்களாக மத்திய அரசு கொண்டு வருவதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் வருகிற 27-ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளிகள் ஒன்றிணைந்து மாபெரும் பாரத் பந்த் போராட்டம் நடத்த இருக்கிறோம். தொழிலாளர்கள் வர்க்கத்தால் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் சங்க மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மண்டல செயலாளர் ராசப்பன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் கருணாகரன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu