ஒரே நாளில் 25 ரவுடிகள் கைது:திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண்
திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பழிக்குப்பழியாக நடந்த கொலைகள் அதிகம். அந்த கொலைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் ரவுடிகள் பட்டியலில் இருந்தவர்கள். திருச்சி மாநகரில் நடக்கும் கொடூர கொலைகள் ரவுடிகளின் கூடாரமாக திருச்சி மாறுகிறதா? என்ற அச்சம் பொதுமக்களிடம் உள்ளது.
ரவுடியிசத்தை மாநகரில் தலைதூக்க விடாமல் முற்றிலும் ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய மாநகர போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதற்காக திருச்சி தில்லைநகர், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம், கே.கே.நகர், கன்டோன்மென்ட், பொன்மலை ஆகிய காவல் சரகங்கள் தலா 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் காவல் நிலைய சரித்திர குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த ரவுடிகளையும் தேடி வருகின்றனர். திருச்சி மாநகரில் 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் ஒரே நாளில் 25 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து தலைமறைவாக உள்ள ரவுடிகளையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆண்டு எட்டு மாதங்களில் சுமார் 35 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள் மட்டும் 20 பேர், போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் 9 பேர், பாலியல் தொழிலில் ஈடுபட்டவர் ஒருவர், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேர் ஆவர்கள். திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அடிக்கடி தகராறு நடக்கும் பகுதிகள் என்று சுமார் 50 இடங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டன. அங்கு போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu