திருச்சியில் நடந்த விபத்தில் 2 பேர் பலி- பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சியில் நடந்த விபத்தில் பஸ் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் மாலிக் பாட்ஷா (வயது 25)மற்றும் ஷாஜகான் (வயது 35) ஆகிய இருவரும் நேற்று இரவு வேலைக்கு வந்தபோது அரியமங்கலம் பால்பண்ணை பஸ் நிறுத்தத்தில் சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது திருவெறும்பூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்தை நோக்கி வேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் டிரைவர் ராபின் குழந்தைராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

இந்நிலையில் இன்று இருவரின் உடலை மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனை செய்த பின் ஆம்புலன்ஸ் மூலம் அரியமங்கலத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் மறியல் போராட்டத்தில் இருந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,இந்த பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் வேகமாக வருவதாலும், சாலையை கடந்து செல்லும் போது வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி இது போன்ற விபத்துகள் நடைபெறுகிறது. சாலையை கடந்து செல்வதற்கு உக்கடை அரியமங்கலம் பகுதியில் சர்வீஸ் சாலை இருந்தும் அதில் வாகனங்களை அதிகமாக நிறுத்தி விட்டுச் செல்வதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இது போன்ற வாகன விபத்துகளில் உயிர் பலி ஏற்படாமல் இருக்க உக்கடை அரியமங்கலம் பகுதியில் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தும் வாகனங்களை அகற்றி சர்வீஸ் சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பழைய அலங்கார் தியேட்டர் வழியாக உள்ள சர்வீஸ் சலையை பால்பண்ணை வரை அமைக்க வேண்டும். தனியார் பஸ்கள் வருமானத்திற்காக போட்டிபோட்டு கொண்டு வேகத்தின் கட்டுப்பாடுகளை மதிக்காமல் செல்வதாலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த விபத்தில் இறந்த மாலிக் பாட்ஷா என்பவருக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாஜஹான் என்பவருக்கு திருமணம் முடிந்து 10 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் திருச்சி காந்தி மார்க்கெட்டில் லோடு மேன் வேலை செய்து வந்தவர்கள்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil