லாரி உரிமையாளர்கள், கூலி தொழிலாளர்கள் மோதல்

லாரி உரிமையாளர்கள், கூலி தொழிலாளர்கள் மோதல்
X

திருச்சியில் லாரி சங்க உரிமையாளர்கள், கூலி தொழிலாளர்கள் மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் பேரமைப்பு லாரி புக்கிங் சென்டர் பார்சல் ஆபீஸ் மையம் திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே இன்று திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு திறந்து வைத்தார். அப்போது சிஐடியுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சாலையின் எதிரே கூட்டமாக நின்று கொண்டிருந்த சிஐடியு வை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென லாரி புக்கிங் அலுவலத்திற்குள் நுழைந்து வியாபாரிகள், லாரி புக்கிங் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களை சரமாரியாக தாக்கினர். இதில் வெங்காய மண்டி தலைவர் கந்தன் தலையில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் கட்டையைக் கொண்டு தாக்கியதில் ரத்தம் கொட்டி மயங்கி விழுந்தார். இவரை காப்பாற்ற வந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் புக்கிங் முன்பு போடப்பட்டிருந்த சாமியானா பந்தல் வாழைமரம் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த சேர், டேபிள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சாலையில் தூக்கி எறிந்தனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இதுகுறித்து வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலுக்கு தகவல் தெரிவிக்கபட்டது . அவர் சம்பவ இடம் வந்து வியாபாரிகள் மற்றும் தொழிலாளியை தாக்கிய சிஐடியு வை சேர்ந்த தொழிலாளர்களை கைது செய்யக்கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களுடன் போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி, வேதரத்தினம், உதவி கமிஷனர்கள் மணிகண்டன், ரவி அபிராம் ஆகியோர் வியாபாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேலும் தாக்கியவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தினர். இதனால் போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட சிஐடியுவை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களை கைது செய்தனர். மேலும் காயமடைந்த கந்தன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags

Next Story
crop opportunities ai agriculture