தேர்தலில் ஆன்லைன் பணபரிவர்த்தனை தடுக்க நடவடிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற உள்ள திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்,புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 118 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.நிறைவு நாளான இன்று பயிற்சி முகாமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நேரில் பார்வையிட்டார்.அங்கு பயிற்சியில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாகு,
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேசிய அளவிலான திறமை வாய்ந்தபயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது., அதில் குறிப்பாக பயிற்சிபெற்ற ஒவ்வொருவருக்கும் சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஒவ்வொன்றிலும் மத்திய மாநில அரசுகளை சேர்ந்த அலுவலர்கள் பயன்படுத்தப்படுவதால் அதற்கான பட்டியலை விரைவில் தயாரிக்க உள்ளோம். மே 24-ஆம் தேதி தற்போது உள்ள அரசின் காலம் முடிவடையும் நிலையில் அதற்கு முன்பாக தேர்தல் நடத்தப்படும். வந்திருக்கக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்களில் 26 மாவட்டங்களில் முதல் நிலை சரிப்பார்ப்பு பணி நிறைவடைந்துள்ளது.மீதமுள்ள மாவட்டங்களில் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் சரிபார்ப்பு பணி நிறைவடையும். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய எந்த தடையும் இல்லை.இருந்தபோதும் அந்த பிரச்சாரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன.அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.அவர்கள் வழிக்காட்டுதலின் படி புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக வருமானவரித்துறை,ரிசர்வ் வங்கி,இதர வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.அது குறித்து கண்காணித்து வருகிறோம்.தேர்தலில் பண விநியோகத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்தலில் ஆன்லைன் மூலம் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்யதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதற்கான இறுதி முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளனர். அது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டிருக்கக் கூடிய குறைபாடுகளை சரிசெய்து பெருமளவில் குறை இல்லாமல் அனைவரும் வாக்களிக்க முயற்சி எடுத்து வருகிறோம்.
தமிழகத்தை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் எண்ணிக்கை 10 ஆக உள்ளது. ஆயினும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் தேர்தல் நடத்தப்படும். மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. கொரோனா காலத்தில் என்னென்ன விதிமுறைகளைப் பின்பற்றபட்டதோ அதே விதிமுறைகளை தேர்தல் நடக்கும் நாட்களிலும் பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு முறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu