திருச்சி மாநகராட்சியை கண்டித்து சாலை மறியல்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக வீடுகளைச் சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து மாநகராட்சியிடம் பலமுறை மனு அளித்தும் நேரில் சென்று புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் கவுன்சிலர் முத்துசெல்வம் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் இடம் வந்த கண்டோன்மெண்ட் போலீஸ் ஏசி மணிகண்டன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது எம்ஜிஆர் நகர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் 300 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை மண்டல திருச்சி கிளை பஸ் டிப்போ இருப்பதால் ஏராளமான அரசு பஸ்கள் வந்து செல்வதால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. மேலும் தேங்கிய சாக்கடை கலந்த கழிவுநீர் இங்குள்ள குடிநீர் தொட்டிகளில் கலந்து விடுகிறது.
இதனால் இப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவித்தனர். சாலையை சரி செய்யவும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் எதிரொலியாக போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக குண்டு குழியுமான சாலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் சாலை மறியலால் திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu