உடல் தானத்திற்கு பதிவு செய்த திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமார்

உடல் தானத்திற்கு பதிவு செய்த திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமார்
X
திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமார் தனது உடலை தானம் செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை  அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியை ஆனந்தியிடம் வழங்கினார்.
திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமார் உடல் தானத்திற்கு பதிவு செய்து உள்ளார்.

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் தன் வாழ்நாளிற்கு பிறகு உடலை தானமாக வழங்க திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி உடற்கூறியல் துறை தலைவர் பேராசிரியர் ஆனந்தியிடம் இறந்தபின் உடல் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து தன்னார்வமாக விண்ணப்பம் அளித்தார்.

உடல் தானம் குறித்து யோகா ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில்

எனது விருப்பப்படி எனது வாழ் நாளிற்குப் பிறகு எனது கண்களும் உடலும் திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க விண்ணப்பித்துள்ளேன்.தானம் செய்ய ஒப்புக்கொண்ட எனது விருப்பத்திற்கு ஏற்ப சட்டபூர்வமான எனது உறவினர்கள் எனது வாழ் நாளிற்குப் பின் உடலினை ஆறு மணி நேரத்திற்குள் திருச்சி அரசு மருத்துவமனையிலோ, கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியிலோ ஒப்படைக்க வேண்டும்.

உடல் தானம் செய்தவர் இயற்கையாக மரணமடைந்தால் விண்ணப்ப நகலுடன் இறந்த உடலை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கலாம். வேலை நாட்களாக இருந்தால் மருத்துவக் கல்லூரியிலும், விடுமுறை நாட்களாக இருந்தால் அரசு மருத்துவமனையிலும் ஒப்படைக்கலாம்.

ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும், ஹெபடைடிஸ் பி.சி வைரஸ் தாக்குதல் அடைந்தவர்களும், கேன்சர் போன்ற உயிர்கொல்லி நோய் பாதிப்படைந்தவர்களின் உடல்கள் தானமாக ஏற்கப்பட மாட்டாது. மேலும் இயற்கையான இறப்பில்லாமல் உடற்கூராய்வு செய்யப்பட்ட உடல்கள் உடற்கூறியல் கல்விக்கு பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் உடல் தானம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது.தன் உடலை தானம் செய்யாதவர் இறந்தால், அந்த உடலை அவரது நேரடியான சட்டப்பூர்வமான உறவினர்கள் விரும்பினாலும் தானம் செய்ய முடியும்.

உடல் தானம் செய்யப்பட்ட ஒருவரின் உடல் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டதும், எம்பார்மிங் செய்யப்பட்டு பதப்படுத்தப்படும். எம்பார்மிங் செய்து பதப்படுத்தப்பட்ட உடல், மருத்துவம் பயில வரும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் உடற்கூறியல் செயல்முறை கல்விக்கு பயன்பாட்டிற்கு உதவும். உடலமைப்பு. உள் உறுப்புகளின் அமைப்பு, அதன் செயல்பாடு என ஒரு உடற்கூறியல் கல்வி கற்க இயலும். ஒவ்வோர் உறுப்பின் பாகங்களையும் செயல்முறையில் சொல்லித் தருவார்கள். நெருப்பிற்கும் மண்ணிற்கும் இரையாகும் இந்த சடலத்தை மருத்துவ மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்கு வழங்குவதற்கு முன்வரவேண்டும் என்றார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!