‘சொன்னதை செய்றீங்க’ முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்கள் சர்ட்டிபிகேட்

முதல்வர் ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் வழங்கி வழியனுப்பினார்.
‘சொன்னதை செய்றீங்க’ என்று முதல்வர் ஸ்டாலினுக்கு 100 நாள் வேலை திட்ட பெண்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்வதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று இரவு விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புக்கு பின்னர் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்று அங்கு தங்கினார்.
இன்று காலை தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காவிரியின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணியினை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் நடந்து வரும் கூழையாறு உள்ளிட்ட சில வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வு முடித்துவிட்டு மகாஜனம் கிராமம் அருகே திருச்சிக்கு திரும்பும் வழியில் சாலை ஓரம் 100 நாள் வேலை திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்த பெண்களை பார்த்ததும் முதலமைச்சரின் கார்கள் சென்ற கான்வாய் நின்றது. காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின் சாலை ஓரம் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் சென்றார்.
அப்போது பெண்கள் முதல்வர் ஸ்டாலினை பார்த்து வணக்கம் தெரிவித்தனர். ஸ்டாலின் அவர்களிடம் 100 நாள் வேலை திட்டங்கள் எப்படி நடக்கிறது?வேலைக்குரிய ஊதியம் ஒழுங்காக வருகிறதா என கேட்டறிந்தார். இந்த ஆட்சி எப்படி இருக்கிறது என்று அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு அந்த பெண்கள் நன்றாக இருக்கிறது. சொன்னதை எல்லாம் செய்றீங்க என்று பதில் அளித்தார்கள். பெண்கள் அளித்த இந்த பாராட்டு சான்றிதழ் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஸ்டாலின் திருச்சி விமான நிலையத்திற்கு கிளம்பினார்.
திருச்சி விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டவர்கள் வழி அனுப்பி வைத்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் , முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி எழுதிய பொன்னர் சங்கர் புத்தகத்தை வழங்கி முதல்வர் ஸ்டாலினை வழியனுப்பி வைத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu