திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: சென்னை பெண்ணிடம் போலீசார் விசாரணை

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு அதிகாலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, சுமார் 4 மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னை பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா, துபாய், ஓமன், மஸ்கட் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கும், அதேபோன்று பெங்களூரு, சென்னை, புதுடெல்லி, ஐதராபாத் ஆகிய பெருநகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் சுமார் 40 விமான சேவைகள் உள்ளதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளும் வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை 2.32 மணி அளவில் திருச்சி விமான நிலைய முனைய மேலாளரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா வேலப்பன் என்ற பெண் அந்த குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்.
அந்த குறுஞ்செய்தியில், திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 34 விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் இருப்பதாகவும், உடனடியாக சோதனை மேற்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் விமான நிலைய அதிகாரிகள் மத்தியில் பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் விமான நிலையத்துக்கு வந்தனர். பின்னர் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் விமான நிலையம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர்.
காலை 6.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள், வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. இதனால் அது வதந்தி என்று நிரூபணம் ஆனது.
இதைத்தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய சங்கீதா வேலப்பன் குறித்து சென்னை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சங்கீதாவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குடும்பத்தாரிடமும் இது குறித்து தகவல் தெரிவித்து கவனமுடன் நடந்து கொள்ளும்படி அறிவுரை வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu