ஆக்கிரமிப்பு அகற்றி வளைவுகளற்ற வகையில் காஜாமலை சாலை அகலப்படுத்தப்படுமா?

ஆக்கிரமிப்பு அகற்றி வளைவுகளற்ற வகையில் காஜாமலை சாலை அகலப்படுத்தப்படுமா?
X

சாலை விரிவாக்கத்திற்கு  இடையூறாக உள்ள பொதுப்பணித்துறை கட்டிட மதில்சுவர்.

ஆக்கிரமிப்பு அகற்றி வளைவுகளற்ற வகையில் காஜாமலை சாலை அகலப்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி கே. கே. நகர் செல்லும் ஆர்.பி.எப். சாலையில், கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால், அதில் உள்ள அபத்தான வளைவுகளை சீராக்கி விபத்துகள் ஏற்படாத வகையில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மன்னார்புரம் ரவுண்டானா பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் இல்லம், காஜாமலை, ஆர்பிஎப், காந்திநகர், மத்திய தானிய கிடங்கு, ஸ்டீல் குடோன், கே கே நகர், வழியாக முள்ளிப்பட்டி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், காஜாமலை முதல் கே. கே. நகர் வரையிலான பகுதி மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் காஜாமலையிலிருந்து 'ஸ்ட்ராத்மோர்" பங்களா வரையிலான 600 மீட்டர் தொலைவு சாலை ஒரு பகுதியாக ரூ. 4 கோடியிலும், அதன் பின்னர் ஆர்.பி.எப் நுழைவாயில் (கேட்) பகுதியிலிருந்து கே. கே. நகர் வரையிலான 1 கி. மீ. தொலைவு சாலை ரூ. 8 கோடியிலும் என மொத்தம் ரூ. 12 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மக்கள் நடமாட்டம் குறைவு, அருகில் குடியிருப்பு பகுதிகளும் குறைவு. ஆனால் தற்போது நெருக்கமான வகையில் குடியிருப்புகள் அதிகரித்து விட்டன. மேலும் கே கே நகர் பகுதியில் மத்திய தானிய கிடங்கும், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்திய நிறுவனத்துக்கான கிடங்கும் அமைந்துள்ளன.

எனவே இச்சாலையில் உணவுப்பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள், இரும்புகள் ஏற்றிச்செல்லும் நீளமான டிரக்குகள் அதிகளவில் செல்கின்றன. மேலும் இலகுரக வாகனங்கள், இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்வதுடன், கே கே நகர் செல்லும் பிரதான சாலைக்கு மாற்று சாலையாகவும் இச்சாலை அமைந்துள்ளது.

இதில் ஸ்ட்ராத்மோர் பங்களா அருகில் சாலை மிகவும் வளைவாக உள்ளது. எனவே, சாலையில் காஜாமலையிலிருந்து கே. கே. நகர் செல்லும் போதும், எதிர்மார்க்கத்தில் செல்லும்போதும், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஸ்ட்ராத் மோர் பங்களாவின் சுற்றுச்சுவர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத வகையில் மறைக்கும் வகையில் உள்ளது.

ஏற்கெனவே இப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது மேற்கொள்ளும் விரிவாக்கப்பணிகளில் மழை நீர் வடிகால் சுற்றுச்சுவறோரம் அமைக்கப்பட்டு வருகின்றது. சுற்றுச் சுவரைத் தாண்டி பல மீட்டர் அகலத்தில் பொதுப்பணித்துறை காலியிடம் அமைந்துள்ளது. (அந்த பங்களா நீண்ட நாட்களாகவே பயன்பாடின்றி கிடக்கின்றது) எனவே, வளைவான பகுதியில் சுற்றுச்சுவரை அகற்றி, மழை வடிகால்கள் அமைத்து சாலையை அகலமாக்க வேண்டும். அப்போது, கனரக வாகனங்களும் எளிதாகச் செல்வதுடன், எதிரே வரும் வகானங்களும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் என்பதால் விபத்துகள் தடுக்கப்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இது குறித்து கே கே நகர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஏ. வீரையா கூறுகையில்,

இந்த சாலையில் காஜாமலை முதல் கே கே நகர் வரை 4 வளைவுகள் உள்ளன. அதில் 1 தவிர மற்றவை மிகவும் குறுகலான வளைவுகள். தற்போது இந்த சாலையில் லாரிகள், டிரக்குகள் அதிகமாக வருவதால், அந்த வளைவுகளை சீராக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். அப்போதுதான் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு பாதுகாப்பு கிடைக்கும். விபத்துகளும் தவிர்க்கப்படும். குரிப்பாக ஸ்டோர்த் மோர் பங்களா வளைவு, காந்திகர் பகுதியில் உள்ள இரு வளைவுகள் ஆகிவற்றை சீராக்க வேண்டியது அவசியம் என்றார்.

இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது

அந்த சாலை இரு பகுதியிலும் மழைநீர் வடிகால்களுடன், சாலையின் அகலம் 7 லிருந்து 9 மீட்டர் அகலத்தில் விரிவாக்கம் செய்து, சில பகுதிகளில் டைல்ஸ்கள் பதித்தும், தெருவிளக்குகள், அமைத்தும் மேம்படுத்தப் படுகிறது. வளைவுகளில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை விளம்பர பலகைகளும் வைக்கப்படவுள்ளது. ஸ்ட்ராத்மோர் பங்களா சுற்றுச்சுவரை அகற்ற பொதுப்பணித்துறை அனுமதியளித்தால் அந்த இடத்தில் மேலும் அகலப்படுத்துவது குறித்து நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிகை எடுக்கப்படும் என்கின்றனர்.

இது தொடர்பாக இப்பகுதி திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டம் 60 ஆவது வார்டு கவுன்சிலர் காஜாமலை விஜய் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகத்தில் பல சாலைகள் இன்னும் நெடுஞ்சாலைத் துறையிடமே உள்ளன. அவற்றை மாநகராட்சி சாலைகளாக்க வேண்டும் என பலமுறை மாகராட்சி கூட்டத்தில் வற்புறுத்தி வருகிறோம். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் மாநகராட்சி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் சாலைகளை மேம்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியும். இந்த சாலை எனது வார்டில் வந்தாலும், சாலை மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத்துறைதான் மேற்கொள்ள முடியும் என்றார்.

சாலை மேம்பாடு என்பது அவசியமான ஒன்று. அந்த வகையில் இந்த சாலை அகலப்படுத்தப்பட்டு வருவதை அனைவரும் வரவேற்கின்றனர். ஆனால் காஜாமலை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், ஸ்ட்ராத்மோர் பங்களா போன்ற அரசு கட்டிடங்களின் மதில்சுவர்களையும் அகற்றி விட்டு சாலையை நேராக்கினால் விபத்துக்கள் இன்றி வாகன ஓட்டிகள் பயணிக்க ஏதுவாகும். எனவே நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....